உ.பி.யின் தொடர்மழையால் 24 மணி நேரத்தில் 50 பேர் பலி: முதல்வர் யோகி அரசு இழப்பீடு தொகை அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் பெய்ந்து வரும் கடும் மழையால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 50 பலியாகி உள்ளனர். இவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு சார்பில் இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களில் கடும் மழை பெய்ந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அமேதி 7, பிரதாப்கர் 6, சண்டவுலி, வாரணாசி மற்றும் ஆசம்கர் ஆகிய நகரங்களில் தலா 4 உயிர்களும் பலியாகி உள்ளன. இந்த உயிர்பலி எண்ணிக்கை மேலும் பல உபி மாவட்டங்களில் ஏற்பட்டு உள்ளது.

கடும் மழையால், கிராமங்களில் உள்ள பழமையான வீடுகளின் கட்டிடச் சுவர்கள் விழுந்து ஏற்படும் பலி அதிகமாக உள்ளது. அதில் வீசிய காற்றினால் மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் விழுந்து உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

மழையால் ஊர்புறம் புகுந்து விட்ட பாம்புகள் கடித்தும் இதுவரை எட்டு பேர் பலியாகி உள்ளனர். மழையை பொருட்படுத்தாமல் சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களினாலும் பல பகுதிகளில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

உபியின் பொதுமக்கள் நிவாரண ஆணையரான ஜி.எஸ்.பிரியதர்ஷிணி தலைமையில் அவசர கூட்டம் கூட்டி இன்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மழையால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உபி அரசு சார்பில் நிவாரண தொகை அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்று முதல்வர் யோகி ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளார். உபியின் வாரணாசி, அலகாபாத், சுல்தான்பூர், காஜிபூர், ஆசம்கர், பலியா, கோரக்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை அறிவிப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

காஜிபூர் மற்றும் பலியாவில் கங்கை, லக்கிம்பூர்கேரியில் சாரதா மற்றும் பாராபங்கியில் காக்ரா ஆகிய நதிகளின் நீர் நிரம்பி ஆபத்தான கட்டங்களை எட்டியுள்ளன. வாரணாசி மற்றும் அலகாபாத்தில் நதி நீர் நகரங்களில் உள்ள கட்டிடங்களிலும் புகுந்துள்ளது.

மேலும் மூன்று நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மழையினால் பல லட்சம் ஹெக்டேர் விவசாயப் பயிர்களும் உ.பியில் சேதம் அடைந்து வருகின்றன.

-ஆர்.ஷபிமுன்னா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE