‘தேசத் தந்தை பிரதமர் மோடி’: ஏற்றுக்கொள்ளாதவர்களை இந்தியர்களாக கருதாதீர்கள்: மத்திய அமைச்சர் பேச்சு

புதுடெல்லி

‘இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதை பெருமையாக நினைக்காதவர்களை இந்தியர்களாக கருதவேண்டாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். வரும் 27-ம் தேதி நடக்கும் ஐநா ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசும் முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் இடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். ஏற்கனவே ஹூ்ஸ்டன் நகரில் நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் ஒன்றாக மேடையில் தோன்றி மக்களிடம் உரையாற்றி இருந்தனர்.

இருதலைவர்களின் சந்திப்புக்குப்பின், அதிபர் ட்ரம்ப் பேசுகையில், " இந்தியாவுக்கு பிரதமராக மோடி வருவதற்கு முன் அமெரிக்காவின் உறவுகளும் சரியில்லாமல் இருந்தது. இந்தியாவில் ஏராளமான குழப்பங்கள், சண்டைகள், மோதல்கள் இருந்தன.ஆனால் மோடி பிரதமராக வந்தப்பின் மக்கள் அனைவரையும் ஒரு தந்தையைப் போல் ஒருங்கிணைத்துள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று அழைக்கலாம்" என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

இதனிடையே புதுடெல்லியில் மத்திய அஞ்சல்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என குறிப்பிட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளிக்கையில், " இதற்கு முன் இருந்த காலத்தைக் காட்டிலும் இப்போது இந்தியா உலக அரங்கில் அதிக மதிப்புடன் பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் மக்கள் இந்தியர் எனச் சொல்லிக் கொள்ள பெருமை கொள்கின்றனர். இவை அனைத்தும் பிரதமர் மோடியின் ஆளுமை, தனிப்பட்ட சிறப்புகளால்தான் நடந்துள்ளது.

அமெரிக்காவில் இதற்கு முன் இருந்த எந்த அதிபரும், இந்தியப் பிரதமர் ஒருவரைப் பார்த்து இதுபோன்று இந்தியாவின் தந்தை என்று கூறியதில்லை. எந்தவிதமான பாகுபாடும் இன்றி, மிகவும் துணிச்சலாக அமெரிக்காவிடமும் அந்நாட்டு அதிபர் ட்ரம்பிடம் இருந்து பிரதமர் மோடியைப் பற்றி உயரிய கருத்து வெளிப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு இந்தியரும் அவரின் அரசியல் தொடர்பு , சித்தாந்தம் குறித்து பெருமை கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒருவர் முதல்முறையாக இதுபோன்ற பெருமை மிகு வார்த்தையை இந்தியப் பிரதமர் ஒருவரைப் பார்த்து பயன்படுத்தியுள்ளார். உலகில் எந்த தலைவரைப் பார்த்தும் பேசவில்லை.

இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதை பெருமையாக நினைக்காதவர்களை இந்தியர்களாகக் கருதவேண்டாம்" எனத் தெரிவித்தார்.

தேசத்துக்கு ஒரு தந்தைதான் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது குறித்து ஜிதேந்திர சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, " இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் அதி்பர் ட்ரம்பிடம்தான் வாதம் செய்ய வேண்டும்.

தீவிரவாத்ததைப் பொருத்தவரை பாகிஸ்தான் பங்கு என்பது அதிக அளவாகும். தீவிரவாதத்தில் பாகிஸ்தான் பங்கு இருக்காது என்று நம்பி இருந்த வெளிநாடுகள் இப்போது இந்தியாவின் உண்மையான கூற்றை நம்புகின்றன. இதற்கு காரணம் பிரதமர் மோடிதான் " எனத் தெரிவித்தார்


பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE