காஷ்மீரில் 91 சதவீதப் பாதைகளில் போக்குவரத்துக்கு அனுமதி: அமெரிக்காவிடம் இந்தியத் தூதர் விளக்கம்

புதுடெல்லி,

காஷ்மீரில் 91 சதவீதப் பாதைகளில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். தங்கள் உறவுகளுடன் பேசி வருகின்றனர் என்று அமெரிக்காவிடம் இந்தியத் தூதர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்கலா விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஊடகங்களில் ஒரு தரப்பு, காஷ்மீரில் உண்மைக்கு மாறான சம்பவங்களையும், செய்திகளையும் வெளியிட்டு வந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் நிலையில் இந்தியத் தூதர் இதைத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

அந்த மாநிலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் விரும்பத் தகாத சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், வன்முறையைத் தடுக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புத் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்தனர்.

ஆனால், அமெரிக்காவில் உள்ள ஊடகங்களில் ஒருதரப்பு, காஷ்மீரில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என்று உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வந்தன. இதையடுத்து, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்கலா காஷ்மீர் நிலவும் சூழல் குறித்து அமெரிக்காவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''காஷ்மீரில் பள்ளத்தாக்குப் பகுதியில் 91 சதவீதப் பகுதிகளில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 சதவீதம் பகுதிகளில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

26 ஆயிரம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசி வருகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடையே எந்தவிதமான தகவல் பரிமாற்றத்திலும் கட்டுப்பாடுகள் இல்லை. உலகின் மற்ற நாடுகளில் இருக்கும் உறவினர்களுடன் அவர்கள் பேசி வருகின்றனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த 370-வது பிரிவை திரும்பப் பெற்றது என்பது, நிர்வாகரீதியாக மாநிலத்தைச் சீரமைக்கும் நோக்கத்தில் மட்டுமேதான். காஷ்மீரின் எந்தவிதமான எல்லைகளுக்குள் நடந்த நிர்வாக மாற்றங்கள் அனைத்தும் உள்நாட்டு பிரச்சினை.

இந்தியத் தூதர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்கலா : கோப்புப்படம்

இந்த நிர்வாக மாற்றத்தால் ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்கள் நல்ல நிர்வாகம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சியைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதற்கு முன் பெண்கள் சமூகரீதியாக வேறுபாட்டுடன் நடத்தப்பட்டனர், அடிமட்ட அளவிலான பஞ்சாயத்து தேர்தலில் கூட அவர்கள் பங்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது.

காஷ்மீர் மாநிலம் தவிர்த்து பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அந்த மாநிலப் பெண்கள் திருமணம் செய்தால் சொத்துரிமை மறுக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டும் அடிமட்ட அளவில் உள்ள மக்களுக்குச் சென்று சேரவில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அரசு 4,200 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை காஷ்மீர் மேம்பாட்டுக்காக ஒதுக்கியும், மிகக்குறைந்த அளவே அடித்தட்டு மக்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது.

இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சிக் குறைவு, முதலீட்டாளர்கள் யாரும் அங்கு முதலீடு செய்யாத நிலையும், வேலையின்மையும் இருந்தது. இளைஞர்கள் மத்தியில் இருந்த விரக்தி நிலையை பாகிஸ்தான் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தீவிரவாதச் செயல்கள் செய்ய மூளைச் சலவை செய்தது''.

இவ்வாறு ஹர்ஸவர்தன் தெரிவித்துள்ளார்.


ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE