63% இந்திய அதிகாரிகள் கூடுதல் உடல் எடையால் தவிப்பு: நாளொன்றுக்கு நடக்கும் தூரம் எவ்வளவு?

By செய்திப்பிரிவு


புதுடெல்லி
இந்தியாவில் தொழிற்சாலை, கம்பெனிகளில் நிர்வாக அளவில் பணிபுரியும் அதிகாரிகளில் 63 சதவீதம் பேர் கூடுதல் எடையுடன் இருப்பதாகவும் அவர்கள் தங்கள் எடையை குறைக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உடல் சார்ந்த ஆப் நிறுவனம் ஒன்று நாடுமுழுவதும், பல்வேறு தொழிற்சாலைகளில், கம்பெனிகளில், வங்கிகளில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் 60 ஆயிரம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களது உடல் எடை குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் சில சிறு நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 21 வயது முதல் 60 வயது வரையிலான ஆண், பெண் இருபாலரையும் தொடர்பு கொண்டு உடல் எடை தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இவர்களில் பிஎம்ஐ எனப்படும் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை விகித்தில் 63 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கூடுதல் எடை இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடையை குறைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பான கேள்விக்கு ஆம் என பதிலளித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்ற கேள்விக்கு நுகர்பொருள் உற்பத்தி துறையைச் சேர்ந்தவர்கள் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5988 அடி எடுத்து வைத்து முதலிடம் பிடிக்கின்றனர். (6000 காலடிகள் என்பது சராசரியாக1.8 கிலோ மீட்டர் ஆகும்)

நிதி சேவையை சேர்ந்தவர்கள் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4969 என்ற எண்ணிக்கையில் 2-வது இடத்திலும் உள்ளனர். இதுபோலவே விற்பனைத்துறையினர், உற்பத்தி துறையினர் நாளொன்றுக்கு சராசரியாக 5000 காலடிகள் வீதம் நடப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதைத்தவிர உடல் எடையை குறைக்க சிறந்த பயிற்சி எது என்ற கேள்விக்கு ஓட்டம் என அதிகமானோர் பதிலளித்துள்ளனர்.

ஆண், பெண் என இருதரப்பினரும் உடல் எடையை குறைக்க சரியான தீர்வாக ஓட்டத்தையே தேர்வு செய்துள்ளனர். இதைத்தவிர சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது, உடற்பயிற்சி கூடத்துக்கு செல்வது, நீச்சல் அடிப்பது என மற்ற பயிற்சிகளும் ஒரளவு பலன் கொடுப்பதாக ஆண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் வீடுகளிலேயே யோகா, வீட்டு வேலைகள் செய்து உடல் எடையை குறைப்பதாக பெண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அலுவலக நாட்களை விடவும் விடுமுறை நாட்களான வார இறுதி நாட்களில் அதிகாரிகள் சக்திகளை செலவு செய்வது குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ர நாட்களில் நாள்தோறும் சராசரியாக 300 கலோரிகளை செலவு செய்யும் அதிகாரிகள் வார இறுதி நாட்களில் 240 கலோரிகள் மட்டுமே செலவு செய்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE