குல்பூஷன் ஜாதவை 3 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாகச் சந்திக்கிறார் இந்தியத் தூதர்

புதுடெல்லி,

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் குல்புஷன் ஜாதவை சந்திக்க தூதரக உதவிகள் அளிக்கப்படும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

இதையடுத்து, 3 ஆண்டுகளுக்குப்பின் குல்புஷன் ஜாதவை இந்தியத் தூதர் கவுரவ் அலுவாலியா இன்று சிறையில் அவரை சந்திப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி இந்தியாவுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம், குல்பூஷணுக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், குல்பூஷணுக்கு தூதரக உதவி உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான் தரப்பில் குல்பூஷண் ஜாதவுக்கு கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தூதரக உதவி கிடைக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, குல்பூஷண் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்கும்போது தங்கள் நாட்டு அதிகாரி ஒருவரும் உடனிருப்பார் என்று பாகிஸ்தான் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை இந்தியா ஏற்கவில்லை. இதனால் குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி கிடைப்பது தடைபட்டது.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் நேற்று கூறுகையில், "வியன்னா ஒப்பந்தத்தின்படியும், சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளபடியும் குல்பூஷண் ஜாதவுக்கு இந்தியத் தூதரக உதவிகள் அளிக்கப்படும். இது பாகிஸ்தான் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டதாக இருக்கும்' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கோரிக்கை ஏற்றுக்கொண்டதாக இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய அதிகாரிகள் கூறுகையில், " குல்புஷன் ஜாதவை சந்திக்க தகுந்த சூழலை பாகி்ஸ்தான் அமைத்துக்கொடுக்கும் என்று நம்புகிறோம். சுதந்திரமான, நியாயமான, அர்த்தமுள்ள சந்திப்பாக இது அமைய வேண்டும், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு கடிதத்துடன் குல்புஷன் ஜாதவைச் சந்திப்போம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்புஷன் ஜாதவுக்கு தூதரக உதவிகள் கிடைக்க வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா போராடி வரும் நிலையில் இப்போதுதான் முதல்முறையாக இந்தியத் தூதர் சந்திக்க உள்ளார்.

ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE