‘‘வெற்றிக்கு லிப்ட்டுகள் இல்லை;படிக்கட்டுகள் தான் ஒரே வழி’’ - ஃபிட் இந்தியா’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி

லிப்டில் ஏறிச் சென்றால் வெற்றி கிடைக்காது, படிக்கட்டுகளில் ஏறிச் செல்லுங்கள் என ஃபிட் இந்தியா தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முதன்முறையாக 2014-ம் ஆண்டு பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தூாய்மை இந்தியா, யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என பல திட்டங்கள் அடுத்தடுத்த அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் உடல் வலிமையை பேணும் வகையில் ஃபிட் இந்தியா’ என்ற திட்டத்தை, பிரதமர் மோடி, இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கட்டுக்கோப்புடன் உடலை பராமரிப்பது என்பது நமது வாழ்வியலின் அங்கமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் நாளாக நாளாக நாம் உடலை பேணுவதை விட்டு விட்டோம். இது எப்படி மாறிப்போனது என்பதை என்னால் சொல்ல முடியும். 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமாக ஒரு மனிதர் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடப்பது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் தொழில்நுட்பம், நவீனத்துவம் வளர வளர நடை பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த கால்ததில் நாம் எங்கும் நடந்து செல்வதை குறைத்துக் கொண்டோம். ஆனால் தொழில்நுட்பம் சொல்கிறது நீங்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முறை உங்கள் பாதங்களை எடுத்து வைக்க வேண்டும் எனக் கூறுகிறது. 5 ஆயிரம் வேண்டாம், ஒருநாளைக்கு 2 ஆயிரம் முறையாவது உங்கள் பாதங்களை எடுத்து வையுங்கள்.

நம்மில் சிலர் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு உடல் எடையை குறைக்க சில கருவிகளை வாங்குகின்றனர். ஒரு சில நாட்கள் ஆர்வத்துடன் உடற்பயிற்சிகளை செய்கின்றனர். ஆனால் ஒரு சில நாட்களுக்கு பிறகு அந்த உடற்பயிற்சி கருவிகள் எல்லாம் வீட்டின் ஒரு மூலையில் கிடக்கும். ஆனால் அவர்கள் கையில் வேறு கருவி இருக்கும் அது செல்போன். அதில் உடலை குறைப்பது எப்படி என்று அவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
நமது உடலையும், மனதையும் சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் நம்மை நாம் புரிந்து கொள்ள முடியும். அதுவரை நமது உடலை பற்றி குறைவாகவே நாம் தெரிந்து இருப்போம். நமது பலம் மற்றும் பலகீனம் பற்றி அப்போது தான் நமக்கு தெரியும்.
இன்று வாழ்வியல் மாற்றங்களால் பல்வேறு நோய்கள் வருகின்றன.

குறிப்பாக சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு போன்றவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் இந்த நோய்களுக்கு ஆளாகி தவிக்கின்றனர். 50 வயது முதல் 60 வயதுக்குள் மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கேள்விப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது 35 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படுவதாக சமீபகாலமாக கேள்விபடுகிறோம்.

இதன் காரணமாக உடலை பேணுவது என்பது இந்தியாவில் மட்டுமல்லாமது உலகம் முழுவதுமே மக்களின் முக்கிய இலக்காக தற்போது உள்ளது.
லிப்டில் ஏறிச் சென்றால் வெற்றி கிடைக்காது, படிக்கட்டுகளில் ஏறிச் செல்லுங்கள். அப்போது தான் வெற்றியை அடைய முடியும். அதன் பயனையும் நாம் உணர முடியும். அது வெற்றிப் படிகட்டுகளாக அமையும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE