வயநாட்டுக்கு 4 நாள் பயணம்: நிவாரண முகாம்களில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டார் ராகுல் காந்தி 

By செய்திப்பிரிவு

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு இந்த மாதத்தில் 2-வது முறையாகச் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை பெய்து வருகிறது. கேரள மாநிலம் வயநாடு, கண்ணூர், மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.

ஏராளமான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் கேரள மாநிலத்தில் 125 பேர் பலியானார்கள். குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 60 பேரும், வயநாடு மாவட்டத்தில் 14 பேரும் பலியானார்கள்.

இதில் அதிகமாக வயநாடு தொகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டமக்கள் சுங்கம், வாலட் உள்ளிட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை முடிந்து கடந்த இருவாரங்களுக்கு முன் 2 நாட்கள் பயணமாக வயநாடு தொகுதிக்கு எம்.பி. ராகுல் காந்தி வந்திருந்தார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட தொகுதியின் எம்.பி. ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அதன்பின் கேரள அரசிடமும், பிரதமர் மோடியிடமும் பேசிய ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை விரைந்து வழங்கிட கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் வயநாடு தொகுதிக்கு 4 நாட்கள் பயணமாக ராகுல் காந்தி இன்று கோழிக்கோடு நகருக்கு விமானம் மூலம் வந்தார்.

வயநாட்டில் உள்ள சுங்கம், வாலட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு இன்று சென்ற ராகுல் காந்தி, மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது ராகுல் காந்தியிடம் பேசிய நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்களின் வீடுகள், விவசாய நிலம் ஆகியவை மழையால் அழிந்துவிட்டன என்று கண்ணீர் விட்டனர், தொடக்க நிவாரணமாக கேரள அரசு ரூ.10 ஆயிரம் வழங்கும் பணம் இன்னும் தங்களை வந்து சேரவில்லை என்று புகார் அளித்தனர். இதை ராகுல் காந்தி கவனமும் கேட்டுக்கொண்டார்.

கேரள அரசிடமும், மத்திய அரசிடமும் மீண்டும் பேசி, உரிய நிவாரணங்களை பெற்றுத் தருகிறேன் என்று பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதி யளித்தார்.

நிவாரண முகாம்களில் இருப்பதால், பள்ளிகூடங்களுக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை, குழந்தைகள் சீருடைகள், புத்தகங்கள், நோட்டுகளை இழந்துவிட்டனர் என்று அங்குள்ள பெண்கள் ராகுலிடம் வேதனை தெரிவித்தனர்.

மக்களின் குறைகளை மொழிமாற்றம் செய்து ராகுல் காந்தியிடம் கே.சி வேணுகோபால் தெரிவித்தார். இதற்கிடையே நாளை மணன்தாவடி, சுல்தான் பத்தேரி, கல்பேட்டா ஆகிய பகுதிகளில் நிவாரண முகாம்களில் இருக்கும் மக்களை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.

வரும் 29, 30-ம் தேதிகளில் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளுக்கு ராகுல் காந்தி சென்று மக்களைச் சந்திக்க உள்ளார். முன்னதாக ராகுல் காந்தி மக்களைச் சந்திக்கும் முன் சாலை ஓர தேநீர் கடையில் தேநீர் குடித்தும், பிஸ்கட், கேரள பாரம்பரிய நொறுக்கு தீனிகளைச் சாப்பிட்டு அங்குள்ள மக்களிடம் உரையாடினார். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE