இருண்ட சக்திகளை முறியடிக்க நாட்டின் நற்சிந்தனையாளர்கள் குரல் எழுப்ப வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

By செய்திப்பிரிவு

இந்தியா ஒரு ஆழமான நெருக்கடியில் தத்தளித்து வருகிறது, இருண்ட சக்திகளை முறியடிக்க சரியான முறையில் சிந்திக்கும் நற்சிந்தனையாளர்களின் ஒத்துழைப்பு இப்போது தேவைப்படுகிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகே முதன்முறையாக மவுனம் கலைத்த மன்மோகன் சிங் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி குறித்த நினைவு கூட்டத்திற்கிடையே தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது “இந்தியா என்ற கருத்து நீண்ட காலம் இருக்க வேண்டுமானால் உங்கள் குரல்களை எழுப்ப வேண்டும்.

ஜம்மு காஷ்மீருக்கு அரசு செய்திருப்பது நாட்டின் பலரின் ஆதரவைப் பெறாதது. இந்த மக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். நம் குரல்களை உயர்த்துவதன் மூலம்தான் இந்தியா என்ற கருத்தை நாம் நீண்ட காலத்துக்கு தக்க வைக்க முடியும். இது நமக்கு மிகவும் புனிதமானது தொடர்ந்து தக்க வைக்கப்பட வேண்டியது அவசியம்” என்றார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நினைவுக் கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், “இந்தியா ஒரு ஆழமான நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆகவே நற்சிந்தனையாளர்கள் பலர் ஒத்துழைப்பு நல்குவது ஒன்றுதான் இந்த இருண்ட சக்திகளுக்கு சவாலாக இருக்க முடியும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் மன்மோகன் சிங் தவிர மணி சங்கர ஐயர், சுபாத் காந்த் சஹாய், மற்ற மூத்த தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE