பிராந்திய ஒற்றுமை முக்கியம்: சீன துணை அதிபரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

இந்தியா - சீனா இடையேயான நல்லுறவு பிராந்திய ஒற்றுமைக்கு வலுசேர்ப்பதாக இருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சீன துணை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசு முறை பயணமாக மூன்று நாட்களுக்கு சீனா சென்றுள்ள ஜெய்சங்கர் இந்தியா - சீனா உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் சீனா செல்வது இது முதன்முறை. இது குறித்து, எனது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே சீனா செல்வதில் மகிழ்ச்சி எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சீன பயணத்தின் ஒரு பகுதியாக சீன துணை அதிபர் வாங் கிஷானை சந்தித்தார் ஜெய்சங்கர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்தியா - சீனா இடையே நடைபெறும் முதல் உயர் மட்ட சந்திப்பு இதுவென்பதால் இச்சந்திப்பு சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி பீஜிங் சென்றிருந்தார். அப்போது அவர் காஷ்மீர் பிரச்சினையில் சீன ஆதரவைக் கோரியிருந்தார். இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இந்த சந்திப்பின்போது சீன துணை அதிபரிடம், "உலக நாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகளால் ஒருவிதமாக நிலையற்ற சூழல் நிலவும்போது, இந்தியா - சீனா இடையேயான உறவு பிராந்திய ஒற்றுமையை ஸ்திரப்படுத்துவதாக இருக்க வேண்டும் என நம்புகிறேன்" என வலியுறுத்திக் கூறியுள்ளார்.

முன்னதாக, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு சீன அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலடியாக காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என இந்தியா அறிக்கை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கரின் இந்தப் பயணம் பிரதமர் மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் இடையேயான இரண்டாவது சந்திப்புக்கு அடித்தளமிடும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE