சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில்: இந்தியாவும் ரத்து செய்தது

புதுடெல்லி

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்துவதாக இந்தியாவும் இன்று அறிவித்தது.

அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் வழங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்தியாவுடனான உறவை துண்டிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. டெல்லியிலிருந்து தூதரை திரும்ப அழைக்கவும், தங்கள் நாட்டிலுள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து நிரந்தரமாக நிறுத்தப்படும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அறிவித்தார். அதன்படி சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் வாகா எல்லையில் நிறுத்தப்பட்டடது.

பின்னர் அந்த ரயிலை இந்திய அதிகாரிகள் டெல்லி கொண்டு வந்து சேர்த்தனர். மேலும், ஜோத்பூர்-கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது. எனினும் இந்தியா தரப்பில் பாகிஸ்தான் செல்லும் ரயில்களை நிறுத்துவதை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்துவதாக இந்தியாவும் இன்று அறிவித்தது.
டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அட்டாரி சென்ற சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பாகிஸ்தான் செல்லாமல் அட்டாரியில் இருந்து மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பட்டது. இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவிக்கையில் தற்போதைய சூழலில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க முடியாத சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE