காஷ்மீர் பெண்கள்: கட்டார் போன்ற பலவீனமான மனிதர்களைத்தான் ஆர்எஸ்எஸ் பயிற்சி உருவாக்கும்; ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் பெண்கள் குறித்த ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் கருத்தைப் பார்க்கும்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி, கட்டார் போன்ற பலவீனமான, பாதுகாப்பற்ற, பரிதாபத்துக்குரிய மனிதர்களைத்தான் உருவாக்குகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளது. லடாக்கை யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும் மாற்றியுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரிகள் வழங்க காரணமாக இருந்த 370, 37ஏ பிரிவை திரும்பப் பெற்றதன் மூலம் அந்த மாநிலப் பெண்கள் இனி வெளிமாநில ஆண்களைத் திருமணம் செய்தால் சொத்துரிமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைக் காரணம் காட்டி, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசுகையில், "ஹரியாணாவில் ஆண் - பெண் விகிதாச்சாரம் குறைந்தபோது அமைச்சர் தனகர் ஒரு யோசனை சொன்னார். நாம் ஏன் பிஹாரில் இருந்து மருமகள்களைக் கொண்டுவரக்கூடாது'' என்றார்.

ஆனால், இப்போது காஷ்மீரில் பெண் எடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35-ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், காஷ்மீர் பெண்கள் இனி வெளி மாநிலத்தவரை திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்ற நிலை மாறும்" என்று பேசினார்.

மனோகர் லால் கட்டாரின் பேச்சுக்கு ஏற்கெனவே டெல்லி மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து அவர் மீது டெல்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஹரியாணா முதல்வர் கருத்துக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் " காஷ்மீர் பெண்கள் குறித்து ஹரியாணா முதல்வர் கட்டார் இழிவான கருத்துகளைப் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆண்டுக்கணக்கில் பயிற்சி அளித்தாலும் கட்டார் போன்ற பலவீனமான, பாதுகாப்பற்ற, பரிதாபத்துகுரிய மனிதர்களைத்தான் உருவாக்குகிறது. ஆண்கள் சொந்தம் கொண்டாடப் பெண்கள் ஒன்றும் சொத்துகள் அல்ல" என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE