வர்த்தகத் தடை, தூதரை திருப்பி அனுப்பிய விவகாரம்: உலக நாடுகள் மத்தியில் தவறான சித்தரிப்பை பாகிஸ்தான் உருவாக்குகிறது: இந்தியா கவலை

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் விவகாரம் முற்றிலும் உள்நாட்டு விவகாரம், ஆனால் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அனைத்தும் உலக நாடுகளை கவலைப்படுத்தும் வகையில் சித்தரிப்பதாக இருக்கிறது என்று இந்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலடியாக இந்தியத் தூதரை திருப்பி அனுப்பியும், வர்த்தக உறவை ரத்து செய்தும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது. இதற்கு பதிலடி கொடுத்து இந்தியா அறிக்கை வெளியிட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை திரும்பப் பெற்ற குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகள், தனி அந்தஸ்துகள் வழங்கப்பட்டு இருந்த அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவரும் உத்தரவு பிறப்பித்து, 370 பிரிவு திருத்தப்பட்டதாகவும், இந்திய அரசமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லுபடியாகும் என்று அறிவித்தார்.

இந்தியாவின் நடவடிக்கையை கண்டித்த பாகிஸ்தான் அரசு இந்தியத் தூதர் அஜய் பிஸாரியாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியும், வர்த்தக உறவை தற்காலிகமாக ரத்து செய்தும் அறிவித்தது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370 நீக்கியதும், மாநிலத்தை இரு பிரிவுகளாகப் பிரித்த எங்களின் நடவடிக்கையும் அந்த மாநிலத்தில் வளர்ச்சியைக் கொண்டு வருவதற்காகத்தான்.

இதற்காகப் பாகிஸ்தான் அரசு நேற்று எடுத்த நடவடிக்கைகளை நினைத்து இந்தியா வருத்தப்படுகிறது. நீங்கள் எடுத்த நடவடிக்கைகள், பிறப்பித்த உத்தரவுகளை மறுஆய்வு செய்து, வழக்கமான பணிகள் தொடர நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்தியாவுடனான வர்த்தக உறவை தற்காலிகமாக ரத்து செய்தும், இந்தியத் தூதரவை திருப்பி அனுப்பிய செயலும், உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தும் தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று நினைக்கிறோம்.

ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு செய்யும் வளர்ச்சிப் பணிகளால், காஷ்மீர் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி குறைய உதவும் என்று நம்புகிறோம். ஆனால், பாகிஸ்தான் எதிர்மறையாக இதை உணர்ந்து கொண்டதை நினைத்து நாங்கள் வியப்படையவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய விவகாரம், முற்றிலும் இந்திய அரசின் உள்நாட்டு விவகாரம் தொடர்புடையது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இதற்கு முன்பும், எப்போதும் இறையான்மையோடு தொடர்புடையது

இந்திய அதிகார வரம்புக்கு உட்பட்ட விவகாரத்தில் தலையிட முயற்சி்த்து, இந்த மண்டலத்தை கவலைக்குள்ளாக்குவது ஒருபோதும் வெற்றி பெறாது”. இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE