உ.பி. விபத்து எதிரொலி: மத்திய அரசின் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் திட்டத்தை கிண்டல் செய்து ராகுல் ட்வீட்

பாஜக எம்.எல்.ஏ.,வால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவோ இளம்பெண் சென்ற கார் மர்மமான முறையில் விபத்துக்குள்ளானதை சுட்டிக்காட்டி, மத்திய அரசின் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தை ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

முன்னதாக, இன்று அதிகாலை 1 மணியளவில் உத்தரப் பிரதேச மாநில உன்னாவோவில் பாஜக எம்எல்ஏவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற உறவுக்கார பெண்கள் இருவர் பலியாகினர். இளம்பெண்ணின் வழக்கறிஞர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். மேலும், விபத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் ட்ரக்கின் நம்பர் ப்ளேட்டில் வாகனப் பதிவு எண் கருப்பு சாயத்தால் அழிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதவில், "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்.. பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம். இந்தியப் பெண்களுக்கு ஒரு சிறப்பு கல்விச் செய்தி இருக்கிறது. உங்களை பாஜக எம்எல்ஏ யாரேனும் பலாத்காரம் செய்தாலும்கூட அவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

உன்னாவோவைச் சேர்ந்த அந்த இளம்பெண் (அப்போது அவருக்கு வயது 16) கடந்த 2017-ம் ஆண்டு தனது உறவினருடன் வேலை கேட்டு பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் புகார் சொன்ன சிறுமியின் தந்தையை ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் இறந்தார்.

குல்தீப்பின் சகோதரர் அடுல் செங்கார் தனது தந்தையை போலீஸ் காவலில் அடித்தே கொன்றதாகக் கூறினார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் முன்னர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனையடுத்து பாலியல் பலாத்கார வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் பேரில் குல்தீர் செங்கார் அவரது சகோதரர் அடுல் செங்கார் கைதாயினர். 

இந்நிலையில், இன்று இளம்பெண் சென்ற காரும் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகியது. பாஜக எம்எல்ஏ இழைத்த அநீதியை எதிர்த்து குரல் எழுப்பியதாலேயே இளம்பெண்ணுக்கு இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியே ராகுல் காந்தி ட்விட்டரில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE