புதுடெல்லி,
இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய(என்எம்சி) மசோதாவை, இன்று மக்களவையில் அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தார்.
மருத்துவத் துறை வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தமாக இது அமையும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) மசோதா குறித்து தெரிவித்தார்.
63 ஆண்டுகளாக இருக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவக் கவுன்சில் மசோதாவை-(2019) மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இந்த மசோதா மருத்துவத் துறையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை முன்வைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஏற்கெனவே இருக்கும் தேசிய மருத்துவக் கவுன்சில் ஊழல் நிறைந்தது என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த மசோதா மக்களுக்கும், மாணவர்களுக்கும் எதிரானது. தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் மசோதா என்று மருத்துவர்கள், மாணவர்கள் அடங்கிய இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில் மக்களவையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்திய மருத்துவத் துறை எதிர்கொண்டுவரும் பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த மசோதாவில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஏழைகளுக்கு எதிரானது அல்ல. மாறாக, ஏழைகளுக்கு ஆதரவானது. இந்திய மருத்துவர்கள் கழகம் சுட்டிக்காட்டிய உண்மையான குறைகள் அனைத்தும் களையப்பட்டுள்ளன.
வரலாறு படைக்கப்படும் போது, மிகப்பெரிய சீர்திருத்தங்கள் நிகழும். இந்த மசோதா மருத்துவத் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் " எனத் தெரிவித்தார்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. வின்சென்ட் பாலா பேசுகையில், "இந்த மசோதா என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை நீக்கிவிட்டு, நியமிக்கப்படும் உறுப்பினர்கள் போன்றது. இந்த மருத்துவ கவுன்சில் வாரியத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் நம்பகத்தன்மையை எவ்வாறு பார்ப்பது. புதிய மசோதாவில் ஒழுங்கமைப்பு அம்சம் இல்லை, தொலைநோக்கு இல்லை" எனத் தெரிவித்தார்.
மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக எம்.பி. மகேஷ் சர்மா பேசுகையில், "1956-ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் முழுமையாக தோல்வி அடைந்தது, மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுதில் தோல்வி அடைந்துவிட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.
மருத்துவப்படிப்பை வணிகமயமாக்கியது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா மூலம், தனியார் துறைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்யும் ஊழலுக்கு வழிவகுக்கும் ‘இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்துக்கு’ முடிவு கட்டப்பட்டும்.
இந்த வாரியத்தில் நியமிக்கப்பட உள்ள 26 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் மருத்துவர்கள். மருத்துவக் கல்லூரியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், கட்டணத்தை முறைப்படுத்தும் அதிகாரமும் இருக்கிறது. 75 சதவீத மருத்துவ இடங்கள் முறைப்படுத்தப்படும்.
நம் நாட்டில் ஆண்டுதோறும் சிகிச்சை பெற வரும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 30 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது, தேசத்துக்கு சிறந்த மருத்துவர்கள், நல்ல மருத்துவ வசதிகள் அவசியம் அதைத்தான் இந்த மசோதா வழங்குகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 121 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதில் 60 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள் " எனத் தெரிவித்தார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.ஆ.ராசா பேசுகையில், " தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழைகளுக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது. மருத்துவம் பயிலும் மாணவர்கள் படித்து முடித்த பின் நெக்ஸ்ட் எனும் தேர்வு எழுதும் முறை, மாணவர்களின் எதிர்காலத்தை அழித்துவிடும்.
வாரியத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்து, ஊழல்வாதிகளை கொள்ளையடிக்க அனுமதித்து, மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் மசோதாவாக இது இருக்கிறது" எனப் பேசினார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்பி. கோகோலி கோஷ் தாஸ்திதார் பேசுகையில் " கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது இந்த மசோதா. இதை ஏற்க முடியாது.மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருக்கிறது. மாணவர்கள் படித்து முடித்த பின் அவர்களுக்கு எக்ஸிட் எனும் தேர்வு நடத்துவது அவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும். இது தேவையில்லாதது" எனத் தெரிவித்தார்.
பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago