புலிகள் வசிக்க மேம்பட்ட சூழல் கொண்ட நாட்டிலேயே முதல் வனப்பகுதி: சத்திய மங்கலத்துக்கு பிரதமர் மோடி விருது

புதுடெல்லி

புலிகள் வசிப்பதற்கு ஏற்ற மேம்பட்ட சூழல் கொண்ட நாட்டிலேயே முதல் வனப்பகுதி என்ற பெருமையை சத்திய மங்கலம் வனப்பகுதி பெற்றுள்ளது. இதற்கான விருதை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.

உலகின் அரியவகை இனமாக மாறி வரும் புலிகளைக் காப்பாற்றினால்தான், வனங்களை பாதுகாக்க முடியும். வனச்சூழல், உணவுச் சங்கிலியை சமநிலைப்படுத்த, புலிகளைக் காப்பது அவசியமாகியுள்ளது.

இதற்காக ஆண்டுதோறும், ஜூலை 29, சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 2018-ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து புலிகள் காப்பகங்களுக்கான விருதுகளையும் அவர் வழங்கினார். சர்வதேச புலிகள் தினமான இன்று சிறந்த பரிணாம வளர்ச்சி கொண்ட திறன்மேலாண்மையுடன் நிர்வகிக்கப்படும் வனப்பகுதிக்கான விருதை சத்திய மங்கலம் வனப்பகுதிக்கு பிரதமர் மோடி வழங்கினார். இதன் மூலம் புலிகள் வசிப்பதற்கு ஏற்ற மேம்பட்ட சூழல் கொண்ட நாட்டிலேயே முதல் வனப்பகுதி என்ற பெருமையை சத்திய மங்கலம் வனப்பகுதி பெற்றுள்ளது. 

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014-ல் 1400 என்ற அளவில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2967 ஆக அதிகரித்தது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்த 3000 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர காண்டில் 340 புலிகள் உள்ளன. கர்நாடகா, கேரள வனப்பகுதிகளும் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும். புலிகள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 2014-ம் ஆண்டு வனத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் 229 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில், ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு என நான்கு இடங்களில், புலிகள் சரணாலயங்கள் உள்ளன. 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, முதுமலையில் 90 புலிகளும், ஆனைமலையில் 13 புலிகளும், சத்திய மங்கலத்தில் 72 புலிகளும், களக்காடு -முண்டந்துறையில் 11 புலிகளும் உள்ளன. கொடைக்கானல் உட்பட புலிகள் சரணாலயமான அறிவிக்கப்படாத பிற வனப்பகுதிகளிலும் புலிகள் வசிக்கின்றன. 

2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ளதாக புலிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE