வலுப்பெறும் விமானப்படை: அதிநவீன 4 அபாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

புதுடெல்லி,
அதிநவீன ஆயுதங்கள் கொண்ட, தாக்குதல் அம்சம் கொண்ட அப்பாச்சி ஏ-64-இ ரக 4 ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையிடம் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இன்று ஒப்படைத்தது. 

அடுத்தவாரத்தில் கூடுதலாக 4 அபாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், போயிங் நிறுவனத்திடம் 22 அபாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்த நிலையில் இன்று முதற்கட்டமாக 4 அப்பாச்சி அதிநவீன ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு அபாச்சி ஹெலிகாப்டரின் விலை ரூ.4,168 கோடியாகும். உலகின் அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்றாகும். போர்க்காலங்களில் சிறப்பாகச் செயல்படக்கூடிய வகையில் அபாச்சி ஏஹெச்-64இ ஹெலிகாப்டர்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் அதிநம்பிக்கையைப் பெற்றது அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள். 

இதுகுறித்து போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "4 அபாச்சி ஹெலிகாப்டர்கள் முதற்கட்டமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரத்தில் மீண்டும் 4 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்படும். திட்டமிட்டபடி, நாங்கள் இந்தியாவிடம் அளித்த வாக்குறுதியின்படி அபாச்சி ஹெலிகாப்டர்களைக் குறித்த காலத்தில் இந்தியாவிடம் வழங்கியுள்ளோம். இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புத் துறை நவீனமயமாக்கப்படும். 2020-ம் ஆண்டில் மீதமுள்ள அனைத்து ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "போயிங் விமான நிறுவனம் வழங்க இருக்கும் 8 அபாச்சி ஹெலிகாப்டர்கள் பதான்கோட் விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, முறைப்படி இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE