மாநிலங்களவையில் சில எம்பிக்களின் செயல் எனக்கு வேதனையளிக்கிறது: வெங்கய்ய நாயுடு வருத்தம்

மும்பை,

மாநிலங்களவையில் எம்.பி.க்களில் சிலர் நடந்து கொள்ளும் முறையும், செயல்பாடுகளும் தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக  மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 
“மக்களின் பார்வையில் இருக்கும் போது, மாநிலங்களவையின் தலைவராக இருக்கும் எனக்கு, சில உறுப்பினர்கள் அவையில் விதிமுறைகளை, மரபுகளை, மீறி அமளியில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. அதிலும் குறிப்பாக சில பிரிவு உறுப்பினர்களின் கடந்த 2 ஆண்டுகளின் செயல்பாட்டால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.

நாடாளுமன்றம் அதற்குரிய மரபுகளுடன், விதிமுறைகளை செயல்பட வேண்டும், இதற்கு முன் உறுப்பினர்களால் அவ்வாறுதான் செயல்பட்டது.  ஆனால், கூட்டத்தொடரின் போது அதிகாரபூர்வ அலுவலக கடிதங்களை கிழித்து, அவைத்தலைவர் மீது வீசுவதுதான் சில அறிவார்ந்த சில உறுப்பினர்களின் செயலாக இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை, சிறப்பை பேசமுடியாத, செயல்படவிடாத சூழலுக்கு தள்ளும்.

அதிலும் மக்களவையில் உள்ள உறுப்பினர்கள் தங்களின், மக்களின் குரல்களை சரியான வகையில் ஒலிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், ஒரு உறுப்பினர்(ஆசம்கான்) பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பெண்களை அவமரியாதையுடன் பேசுவது நம்முடைய நாகரீகத்தில் இல்லை. இதுபோன்ற மோசமான செயல் நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயகத்தை அர்த்தமற்றதாக்கிவிடும். 

ஜனநாயக்கத்தின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அதிக அளவில் பங்கேற்று வாக்களித்து வருகிறார்கள். தாங்கள் தேர்வு செய்யும் உறுப்பினர், சிறப்பாக செயல்பாடுவார் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுபோன்ற மோசமான செயல்பாடுகளால், மக்களின் விருப்பத்துக்கு ஏற்க ஜனநாயக, உண்மைத் தன்மையுடன் செயல்படாத உறுப்பினர்களை பற்றி பேசுவதற்கே வருத்தமாக இருக்கிறது. 

ஜனநாயகத்தின் உரித்தானதாக விளங்கும், ஆக்கப்பூர்வ விவாதம், ஆலோசனை, மற்றும் முடிவெடுத்தல் போன்றவற்றை அவையில் அமளி, கூச்சல், மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தல் போன்றவற்றால் மாற்ற முடியாது. எதிர்க்கட்சியினரும், ஆளும்கட்சியினரும் எதிரிகள் அல்ல. 

போட்டிபோடுதல் சில இடங்களில் விரோதபோக்குக்கும் இட்டுச் செல்லும். ஆளும் கட்சி எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இணைந்து, மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட வேண்டும். சட்டங்களை நிறைவேற்றவிடாமல் நிறுத்துவது என்பது ஜனநாயகத்தை சீர்கெடுத்து, மக்களுக்கு துரோகம் செய்வதாகும். முன்னெடுத்து செல்வதற்குச் சிறந்த வழி, அரசை அதன் பாதையில் செல்லுங்கள் என எதிர்க்கட்சிகள் சொல்வதுதான்”.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE