பல மாநிலங்களிலும் வெளுத்து வாங்கும் கனமழை: மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு

புதுடெல்லி

நாட்டின் பல பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் காஷ்மீர், உத்தர பிரதேசம், பிஹார், அசாம் உட்பட பல மாநிலங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் இரவுமுழுவதும் கனமழை பெய்தது. மும்பை சாந்தகுரூஸ் பகுதியில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 24 மணிநேரத்தில் 21.9 செ.மீ. மழை பெய்துள்ளது. 

கொலாபாவில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நகரின் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. காதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பன்வல் அருகே பாலத்தை தொட்டுக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

மும்பையில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கிக் கொண்டது. 700க்கும் மேற்பட்ட பயணிகளை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றன். 

அசாம் மாநிலத்தில் ஏற்கெனவே கனமழையால் காசிரங்கா உயிரியல் பூங்கா நீரில் மிதக்கிறது. அங்கு தற்போது பெய்து வரும் மழைல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

காஷ்மீரில் கனமழை பெய்து வரும் நிலையில் ஜம்மு அருகே பிலாவர் என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளத்தில் பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. துணை ராணுவப்படையினர் விரைந்து வந்து அந்த பேருந்தை மீட்டனர்.

இதனிடையே மும்பையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE