இஸ்ரோவுக்கு சபாஷ்: சந்திரயான்-2 பூமியின் 2-வது சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக மாறியது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்
நிலவை தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் பூமியின் 2-வது சுற்றுவட்டப் பாதைக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்தது இல்லை. இதை ஆய்வு செய்வதற்காக  சந்திரயான்-2 எனும் விண்கலத்தை தயாரித்து கடந்த திங்கள்கிழமை மாக்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. 

சந்திரயான்-2 விண்கலம் மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் அனைத்தும் நவீன தொழில் நுட்பங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை. சந்திரயான்-1 விண்கலத்தில் அமெரிக்கா, ஐரோப்பா கூட்டமைப்பு நாடுகளுக்குச் சொந்தமான 5 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றன. அந்நிலை மாற்றப்பட்டு பிற நாடுகளின் உதவியின்றி முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 13 கருவிகளே சந்திரயான்-2 விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ரூ.374 கோடியில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3, ஐந்தாம் தலைமுறை ராக்கெட்டாகும். இதன் எடை 6 ஆயிரத்து 400 கிலோ. இதன் உயரம் மிகக் குறைவாக 43.43 மீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. மார்க்-3 ராக்கெட்டில் மொத்தம் 3 நிலைகள் உள்ளன. இதன் இறுதி நிலையான கிரையோஜெனிக் இன்ஜின் முழுவதும் நம் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இதன்மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் கிலோ எடை உடைய செயற்கைக்கோள்களையும் நம்மால் விண்ணில் செலுத்த முடியும்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை சந்திரயான் விண்கலம் 48 நாட்களில் சென்றடையும். அத்துடன், இத்தகைய ஆய்வுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் செலவு செய்த தொகையைவிட 20 மடங்கு குறைவான செலவில் (ரூ.978 கோடி) இந்தியா இந்த திட்டத்தை நிறைவேற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 22-ம் தேதி பூமியின் முதல் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான்-2 விண்கலம் பயணிக்கத் தொடங்கிய நிலையில், இன்று வெற்றிகரமாக பூமியின் 2-வது சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், " சந்திரயான்-2 செயற்கைக்கோள், வெற்றிகரமாக இன்று(26-ம் தேதி) அதிகாலை 01.8 மணிக்கு திட்டமிட்டபடி முதல் சுற்றை முடித்து  2-வது சுற்றுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 883 வினாடிகள் வரை விண்கலத்தின் உந்துவிசை செயல்பட்டு, வெற்றிகரமாக 54 ஆயிரத்து 829 உயரத்துக்கு உயர்த்தப்பட்டது. தற்போது விண்கலம் தனது இயல்பில் பயணித்து வருகிறது.

வரும் 29-ம் தேதி நண்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி அளவில் விண்கலத்தின் உந்துவிசை உயர்த்தப்பட்டு, பூமியின் 3-வது சுற்றுவட்டப்பாதைக்குள் பயணிக்கத் தொடங்கும் " எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 22-ம் தேதி சந்திரயான்-2 45 ஆயிரத்து 475 கி.மீ உயரத்துக்கு அதன் உந்துவிசை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று 54 ஆயிரம் கி.மீட்டர் உயரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்கலத்தில் 3 பிரிவுகள் இருக்கின்றன. 2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டர் பகுதி, சந்திரனில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் எனும் பகுதி இது 1,471 கிலோ எடை கொண்டது, அதன்பின் நிலவின் தென்துருவத்தில் இறங்கி சுற்றிவரும் ரோவர் பிரக்யான் 27 கிலோ எடை கொண்டதாகும் என்பது கவனிக்கத்தக்கது.

திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நிலவை சென்றடையும். அதன்பின் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டர் கருவி விக்ரம் நிலவில் தரையிறங்கி ரோவர் கருவி பிரக்யான் ஆய்வு செய்யும். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE