கார்கில் போர் 20 ஆண்டு வெற்றி நாள்: என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்: குடியரசு தலைவர் : புகைப்படங்ளுடன் பிரதமர் மோடி பெருமிதம்

 

புதுடெல்லி, பிடிஐ
பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படும் நிலையில், போரில்ஈடுபட்டு நாட்டை பாதுகாத்த வீரர்களின் வீரத்துக்கு தலைவணங்குகிறோம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

கார்கில் போர் நடந்த போது, போர்களத்துக்கு சென்று வீரர்களைச் சந்தித்து உற்சாகமூட்டிய புகைப்படங்களை பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வீரர்களுக்கு  புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 1999-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதியில் உள்ள கார்கில் பகுதியில் இந்திய நிலையை பாகிஸ்தான் ராணுவத்தினர், தீவிரவாதிகளின் துணையுடன் ஊருருவி ஆக்கிரமித்தனர்.  பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட 'ஆப்பரேஷன் பாதர்' என்ற பெயரில் இந்தஊடுருவல் நடந்தது

இதையடுத்து, பாகிஸ்தானின் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில் ஆப்ரேஷன்விஜய் எனும் திட்டத்துடன் கடந்த 1999, மே 26-ம் தேதி  இந்திய ராணுவம் தீவிரமாக நடவடிக்கையை தொடங்கி, பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி, தீவிரவாதிகளையும், ராணுவத்தினரையும் விரட்டி அடித்தது இந்திய ராணுவம். இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை, சர்வதேச அளவில் அளித்த நெருக்கடி, அதிரடி போர் யுத்திகள் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்குவதாக அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார்.

இதையடுத்து, ஜூலை 26-ம் தேதி கார்கில் மலைப்பகுதியில் இந்திய ராணுவம் மீண்டும் தேசியக் கொடியை நாட்டி வெற்றியைக் கொண்டாடியது. அன்றைய தினம் முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. 

கார்கில் போர் வெற்றியின் 20-ம் ஆண்டு தினம் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "  கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் மலைப்பகுதியில் நமது ராணுவ வீரர்களின் துணிச்சலை இந்த தேசம் கார்கில் வெற்றி நாளில் நினைவுகூர்கிறது. இந்திய தேசத்தை பாதுகாத்த வீரர்களின் மன உறுதி, துணிச்சலுக்கும் நாம் வீர வணக்கம் செலுத்துகிறோம். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு நாம் என்றென்றும் கடன் பட்டுள்ளோம் ஜெய்ஹிந்த்" எனத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில் " கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடந்த சமயத்தில் போர்களமான கார்கிலுக்கு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நம்முடைய துணிச்சல் மிக்கவீரர்களின் ஒற்றுமையை இங்கு வெளிப்படுத்துகிறேன். கடந்த 1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர்  மற்றும் இமாச்சலப்பிரதேச பாஜகவில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கார்கில் போரின் போது கார்கில் பகுதிக்குச் சென்று நமது வீரர்களுடன் உரையாற்றி, கருத்துக்களை பகிர்ந்து கொண்டது என்னால் மறக்க முடியாத நிகழ்வு. கார்கில் வெற்றிக்காக வீர மரணம் அடைந்த பாரத தாயின் மகன்களுக்காக என் உள்ளத்தில் இருந்து பிரார்தனை செய்கிறேன். நமது வீரர்களின் துணிச்சல், வீரம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவுகூறுகிறேன் " என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE