அம்புஜா சிமென்ட்ஸில் மேகி அழிப்புக்கு ரூ.20 கோடி செலவு

By பிடிஐ

இந்தியாவில் தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை ஆலைகளில் கொட்டி அழிக்க அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடியை நெஸ்லே நிறுவனம் செலுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் உள்ள அம்புஜா சிமெண்ட்ஸ் ஆலையில் வைத்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை எரிக்கும் பணி நடந்து வருகிறது. நூடுல்ஸை அழிக்க நெஸ்லே நிறுவனம் அம்புஜா சிமென்ட்ஸுக்கு ரூ.20 கோடி அளித்துள்ளது.

இது குறித்து நெஸ்லே இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்க குஜராத் அம்புஜா சிமென்ட்ஸ் உதவி வருகிறது."

அம்புஜா சிமென்ட்ஸுக்கு அளித்த தொகையை தெளிவுபடுத்தாத அவர், "நூடுல்ஸை அழிக்க மேலும் கூடுதல் செலவு தேவைப்படுகிறது. வெளி இடங்களில் தேங்கி கிடக்கும் பாக்கெட்டுகளை பெறுவது, அவற்றை ஆலைகளுக்கு கொண்டு செல்வது. பின்னர் அழித்த அவற்றின் கழிவுகளை அகற்றுவது என பல கட்ட செலவுகள் இதையும் தாண்டி உள்ளது.

அம்புஜா சிமென்ட்ஸுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான ரசாயன உப்பு மற்றும் காரீயம் கலந்திருப்பது தெரிய வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்கள் அதற்கு தடை விதித்தன. இறுதியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமும் நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தது.

இதனால் பல்வேறு மாநிலங்களில் கையிருப்பில் உள்ள நூடுல்ஸை அழிக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 27,420 டன் மேகியில் நெஸ்லே நிறுவனத்தின் 5 உற்பத்தி ஆலைகளில் 1,422 டன் உள்ளது. இவை அனைத்தும் தற்போது மேகி நூடுல்ஸ் உற்பத்தியை நிறுத்திவிட்டன. 38 விநியோக மையங்களில் 8,975 டன் மேகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெஸ்லேயின் தாயகம் சுவிட்சர்லாந்தாகும். இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மொத்தம் 27,420 டன் மேகியை திரும்பப் பெற வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நடந்து வர, அதனை அழிக்கும் பணியும் உற்பத்தி ஆலைகளில் நடந்துவருகிறது.

பொருட்களை அழிக்க இங்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில், வெளிநாடுகளுக்கு நூடுல்ஸை ஏற்றுமதி செய்ய மும்பை உயர் நீதிமன்றமும் நெஸ்லே நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE