முல்லை பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு கோரும் வழக்கு: கேரள அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By எம்.சண்முகம்

முல்லை பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள அணையின் நிர்வாகத்தை தமிழகமும், பாதுகாப்பை கேரளமும் கவனித்து வருகிறது. கேரள அரசு பாதுகாப்பு வழங்குவதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு வழங்கி விடுகிறது.

இந்நிலையில், முல்லை பெரி யாறு அணைக்குள் நுழையும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்ததால், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

பாதுகாப்பு வழங்க முடியாது

இம்மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘முல்லை பெரியாறு அணை கேரளாவில் அமைந்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசியல் சாசன அதிகாரத்தின்படி, மாநில அரசு வசம் உள்ளது. எனவே, கேரள அரசு கேட்டுக் கொண்டால் மட்டுமே மத்திய தொழில் பாதுகாப்பு படை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், அந்த செலவை அந்த மாநில அரசு தான் ஏற்க வேண்டும். அணையின் பாதுகாப்பை முழுமையாக கவனித்துக் கொள்வதாக கேரள அரசு உறுதி அளித்துள்ளது. எனவே, முல்லை பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு தேவையில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்

மத்திய அரசின் மனுவுக்கு தமிழக அரசு சார்பில் அளித்துள்ள பதிலில், ‘முல்லை பெரியாறு அணைக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு களான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர் - இ - தொய்பா, விடுதலைப் புலிகள் மூலம் அச்சுறுத்தல் வந்துள்ளது. உளவுத்துறை தகவல்கள் மூலம் இந்த அச்சுறுத்தல் குறித்த விவரம் கிடைத்துள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி, மத்திய தொழில் பாதுகாப்பு படையை நியமிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அமிதவா ராய் மற்றும் அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் பதில் மனு மற்றும் தமிழக அரசின் வாதம் குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி கேரள மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய அணைக்கு எதிர்ப்பு

முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்டக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், புதிய அணை குறித்து ஆய்வு நடத்த சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு மனு செய்துள்ளது. இதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்