நாட்டில் முதல் முறையாக பிஹாரில், மத்திய தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுகிறது. இதில் போலி வாக்காளர்களை நீக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல் நேரங்களில் வாக்காளர்கள் பட்டிய லில் போலி வாக்காளர்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் போலி பெயர்களை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் முதன் முறையாக புதிய முயற்சி எடுத்துள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பும், அம்மாநில வாக்காளர் பட்டியலை தனது நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கவும் இதற்காக சிறப்பு தணிக்கையாளர்கள் கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களை அனுப்பவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த வகையில் முதல் மாநிலமாக வரும் செப்டம்பர் - அக்டோபரில் தேர்தல் நடைபெறவுள்ள பிஹார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து `தி இந்து’விடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, “பிஹாரில் இந்தக் குழுக்கள் செவ்வாய்க்கிழமை (நேற்று) பணியை தொடங்கியுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தணிக்கையாளர்கள் உட்பட 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பிஹாரில் சுமார் ஒரு மாதத்துக்கு மேல் தங்கி அதன் 38 மாவட்ட வாக்காளர் பட்டியலையும் சரிபார்க்க உள்ளனர். ஆனால் இதற்கும் வழக்கம்போல் மாநில தேர்தல் அதிகாரிகள் சார்பில் நடைபெறும் சரிபார்ப்பு பணிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்றனர்.
பிஹாரில் இந்தக் குழுக்கள் 3 கட்டங்களாக வாக்காளர் பட்டியலை சரிபார்க்க உள்ளனர். இந்தக் குழுக் களின் அனுபவத்தை பொறுத்து, மற்ற மாநிலங்களில் தேவையான மாற்றங்களுடன் இந்த முயற்சி தொடரும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிஹாரின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளி யிடப்பட உள்ளது. இதற்கு முன்பாக தேர்தல் ஆணையத்தின் குழுக்கள் தங்கள் பணியை முடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர் அட்டையின் புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்படுவது, தொகுதி மக்களிடம் நேரடியாக சென்று ஆலோசிப்பது உட்பட பல புதிய முயற்சிகளை இந்தக் குழுக்கள் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. வரும் காலத்தில் வாக்காளர்கள் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை இமெயில் மூலம் செய்யவும் முயற்சி எடுக்கப்பட உள்ளது.
2004-ம் ஆண்டு வரை பிஹார், உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்கள், வாக்காளர்களை மிரட்டுவது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது என `அடாவடி’ தேர்தலுக்கு பெயர் போன மாநிலங்களாக இருந்தன. இந்த முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு பிஹாரில் கடந்த 2004 சட்டப்பேரவை தேர்தலில் கே.ஜே.ராவ் என்ற அதிகாரியை அனுப்பிய தேர்தல் ஆணையம், தேர்தல் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாட்டின் மற்ற மாநிலங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வகையில் தற்போது வாக்காளர் பட்டியலை நேரடியாக சரிபார்க்கும் முயற்சியும் பிஹாரில் தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பிஹாரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் இதுவரை இடம் பெறாத மற்றும் விட்டுப்போன வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டனர். போலி வாக்காளர்களை நீக்கும் முயற்சியாக இரு இடங்களில் பெயர் உள்ளவர்கள் அதில் ஒன்றை தாமாக முன்வந்து நீக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற சுமார் 3.4 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், 70,000 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago