தத்கல் சிறப்பு ரயில்கள் விரைவில் அறிமுகம்

By பிடிஐ

பயணிகள் நெரிசல் மிக்க காலத்தில், 'தத்கல் சிறப்பு ரயில்'களை விரைவில் அறிமுகம் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக அறிமுகமாக இந்த முறையில், ரயில் கட்டணம் ரூ.175 முதல் ரூ.400 வரை கூடுதலாக இருக்கும்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பயணிகள் கட்டண வருவாயை அதிகரிக்கும் விதமாக, பயணிகள் நெரிசல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் அல்லது காலங்களில் தத்கல் கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்.

விடுமுறை காலம், பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கான கட்டணம் வழக்கமான ரயில்களில் வசூலிப்பது போலவே இருக்கும். ஆனால், தத்கல் சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் வழக்கமான ரயில் கட்டணத்துடன் ரூ.175 முதல் ரூ.400 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

அதாவது, இரண்டாம் வகுப்பு அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதம், எசி பெட்டிகள் உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கான அடிப்படை கட்டணத்தில் 30 சதவீதம் என கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த ரயில்களில் சலுகை கட்டணம் கிடையாது. தத்கல் கோட்டா வசதியும் இல்லை.

இந்த ரயில்களுக்கான டிக்கெட்டுகளை ரயில்வே கவுன்ட்டர்களிலும் இணையதளம் மூலமாகவும் பெறலாம். மேலும், தத்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு கால விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

இப்போதைய நிலையில் தத்தல் டிக்கெட், பயணம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், தத்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் குறைந்தபட்சமாக 10 நாட்களாகவும் அதிகபட்சம் 60 நாட்களாகவும் இருக்கும்.

தத்கல் சிறப்பு ரயில் டிக்கெட் நடைமுறை தொடர்பான சாப்ட்வேர் தயாராகி வருகிறது. இது தயாரானதும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் தத்கல் ரயில் சேவை தொடங்கும்" என்றார் அவர்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE