மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஏழைகள், விவசாயிகளுக்கு ஆதரவானது என்றும் பாஜகவை குறை கூறிப் பேசுவது எதிர்க்கட்சிகளின் பிறவி குணம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் பேரணிக்கு பதிலடியாக இந்த கருத்தை அவர் தெரிவித்தார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில், பாஜக எம்.பி.க்களுக்கான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு கொள்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்சி எம்பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஏழைகள், விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு எத்தனையோ திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து கட்சி எம்பிக்கள் பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். நம்முடைய அரசு செய்து வருவதையும் முந்தைய அரசு செய்ததையும் வேறுபடுத்திக் காட்டவேண்டும். மழை காரணமாக 50 சதவீத பயிர் சேதம் ஏற்பட்டால்தான் விவசாயிகளுக்கு இழப்பீடு என்ற நிபந்தனையை தளர்த்தி, 33 சதவீதம் சேதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நான் எடுக்கும் எல்லா முடிவுகளும் ஏழைகள் நலனுக்கானவை. ஏழைகளுக்காக பாடுபடுகிறது இந்த அரசு. செய்தியில் வர வேண்டும் என்பதற்காக அல்ல. உண்மையில் அவர்களுக்கு நன்மை செய்யாவிட்டால் நிம்மதியான உறக்கம் வருவதில்லை. நாங்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பது ஏழைகள் நலனுக்காக, அதிகாரத்தை அனுபவிப்பதற்காக அல்ல.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பணவீக்கம் குறைந்தது, சிமென்ட் விலை குறைந்தது. இதனால் ஏழைகள் பலன் அடைந்துள்ளனர். சிலருக்கு பாஜகவை குறை கூறுவதுதான் பிறவி குணம். குறை சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை என சொல்லமாட்டேன். ஆனால் தாங்கள் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ள அவர்களுக்கு உரிமை இல்லை.
மத்திய அரசின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நம் நாடு வேகமாக வளர்வதாக அமெரிக்க அதிபர், உலக வங்கி தலைவர் உள்ளிட்டோர் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பிரதமர் அருகே மேடையில் அமர்ந்திருந்தனர்.
நாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமாக செயல்படும்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதி இடைவெளிக்குப் பிறகு இன்று தொடங்குகிறது. இதில் சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இதுதவிர வேறு பல பிரச்சினைகளையும் எழுப்ப திட்டமிட்டுள்ளன.
எனவே, பாஜக எம்பிக்கள் அனைவரும் இந்த கூட்டத் தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, “பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று நம்புகிறேன். பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து நாடாளுமன்ற செயல்பாடு 125 சதவீதத்தை எட்டி உள்ளது” என்றார்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago