உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் இந்த முறை, இந்து உயர் சமூகத்தினரின் வாக்குகளை கவரும் முயற்சியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இறங்கியுள்ளார். இதற்காக, அவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு முஸ்லிம் வாக்குகளும் யாதவ் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளும் மிகவும் உதவியாக இருந்தன. பெரும்பாலும் இவர்களை நம்பியே அரசியல் செய்துவரும் முலாயம் சிங்குக்கு ‘முல்லா முலாயம்’ எனவும் பெயர் உண்டு.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71-ல் பாஜக வெற்றி பெற்றது. 2017-ல் நடைபெறவுள்ள உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் இருப்பதாக பாஜக நம்புகிறது. உ.பி.யில் அதிக அளவில் வாழும் உயர் சமூகத்தினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளும் கடந்த மக்களவை தேர்தலில் கணிசமாக பாஜகவுக்கு கிடைத்தது இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், சற்று அஞ்சிவிட்டதாகக் கருதப்படும் முலாயம் சிங், இந்து உயர் சமூகத் தினரையும் கவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
கரசேவகர்கள் பலிக்கு வருத்தம்
உ.பி.யில் 1990-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியின்போது, ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தி வந்த கரசேவகர்கள் மீது அப்போது முதல்வராக இருந்த முலாயம் சிங் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இதில் 16 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக முலாயம் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 23-ம் தேதி, ராம் மனோகர் லோகியாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் முலாயம் இந்த வருத்தத்தை தெரிவித்தார்.
இதையடுத்து, மாநில முதல்வரான அவரது மகன் அகிலேஷ் சிங் யாதவ், மூத்த குடிமக்கள் இந்து புனிதத் தலங் களுக்கு யாத்திரை செல்வதற்கு ‘ஸ்ரவண் யாத்ரா’ எனும் திட்டத்தை அறிவித்தார்.
இதன்படி மூத்த குடிமக்களுக்கு, சிந்து தரிசனம் செய்ய ரூ. 10 ஆயிரமும் மான்சரோவர் யாத் திரைக்கு ரூ. 50 ஆயிரமும் உ.பி. அரசு கொடுக்கும். இதுமட்டுமன்றி உ.பி.யின் தெய்வீக நகரமான மதுரா - பிருந்தாவன் வளர்ச்சிக்காக ‘பிரிஜ் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி வாரியம்’ ஒன்றையும் அகிலேஷ் அமைத்துள்ளார். டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் மதுரா, இந்துக் கடவுளான கிருஷ்ணரின் ஜென்ம பூமியாகக் கருதப்படுகிறது.
கேஜ்ரிவால் பாணியா?
இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் தேசிய நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சியினரால் வெளியான ஒரு ‘ஸ்டிங் ஆப்பரேஷன்’ பதிவில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், ‘பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க முஸ்லிம்கள் தமக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழியில்லை எனவும், அதற்காக அவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கத் தேவையில்லை’ எனவும் கூறியிருந்தார். இதே பாணியில் தான் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க முஸ்லிம்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என முலாயம் நம்புகிறார். அதே சமயம் உயர் சமூகத்து இந்துக்களை கவர முயற்சிப்பதில் தவறில்லை” என்றனர்.
தாக்கூர் வாக்கு பெற அமர்சிங்
இதற்கு முன் இந்துக்களின் முக்கிய உயர் சமூகமான தாக்கூர் வாக்குகளும் கணிசமாக சமாஜ் வாதி கட்சிக்கு கிடைத்து வந்தது. இதற்கு இந்த சமூகத்தைச் சேர்ந்த அமர் சிங்கை கட்சியின் பொதுச் செயலாளராக முக்கியப் பொறுப்பில் வைத்திருந்தது காரண மாகக் கூறப்பட்டது.
முலாயமுடன் நெருக்கமாக இருந்த அமர்சிங், சுமார் 15 வருடங் களுக்கு பின் சமாஜ்வாதி கட்சியில் விலகினார். இதன் பாதிப்பை அடுத்து வந்த தேர்தல்களில் உணர்ந்த முலாயம், அமர்சிங்கை கடந்த வருடம் மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சித்தார். ஆனால், அவரது சகோதரர் ராம்கோபால் யாதவின் கடுமையான எதிர்ப்பால் அந்த முயற்சியை கைவிட வேண்டியதாயிற்று.
அடுத்த தேர்தல் 2017
உ.பி. அரசின் புள்ளிவிவரப்படி முஸ்லிம்கள் உட்பட பிற்படுத்தப் பட்டவர்கள் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முற்பட்டவர் என அனைவருமாக முஸ்லிம்கள் 22 சதவீதம் பேர் உள்ளனர். பெரும்பான்மையான 70 சதவீத இந்துக்களின் வாக்குகளில் பிராமணர்கள் 9%, தாக்கூர்கள் 7%, யாதவர்கள் 8% மற்றும் தலித்துகள் 28% பேர் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago