மாண்புமிகு பிரதமருக்கு... மரணப் படுக்கையில் ஓர் உருக்கமான கடிதம்

By பாரதி ஆனந்த்

சுனிதா தோமர்... புற்றுநோய் இவரது உயிரை இன்று (புதன்கிழமை) அதிகாலை காவு வாங்கிவிட்டது.

மரணப் படுக்கையில், கடைசி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்த சுனிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் இப்போது துடிப்புடன் இணையத்தில் உலா வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகதான் அவர் அந்தக் கடிதத்தை பிரதமர் மோடிக்கு எழுதினார்.

யார் இந்த சுனிதா?

நீங்கள் திரையரங்கு சென்று சினிமா பார்ப்பவர் என்றால் நிச்சயம் சுனிதா உங்களுக்கு பரிச்சியமானவரே. பெரும்பாலான திரையரங்குகளில் சுனிதா தோன்றும் புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான அந்த விழிப்புணர்வு விளம்பரத்தை பார்க்க முடியும்.

'புகையிலை என் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது' என சுனிதா தனது வாக்குமூலத்தை அதில் பதிவு செய்திருப்பார்.

என்ன காரணம்?

சரி, மரணப்படுக்கையில் சுனிதா அத்துனை வேதனைக்கு இடையேயும் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும்? இதோ அதற்கான விடை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவை எடுத்தது.

அதன்படி சிகரெட் பாக்கெட்டுகளில் தற்போது 40% அளவுக்கு அச்சிடப்படும் எச்சரிக்கை படம் 85% பெரிதாக்கப்படவேண்டும். மத்திய சுகாதாரத்துறையின் இந்த முடிவு இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.

ஆனால், சிகரெட் பாக்கெட்டுகளில் பெரிய அளவில் எச்சரிக்கை செய்யும் படங்களை அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், 2003-ம் ஆண்டு சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான சட்டப்பிரிவை ஆய்வு செய்த பாராதிய ஜனதா எம்.பி. திலீப்காந்தி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சுகாதார அமைச்சருக்கு அனுப்பிய ஓர் அறிக்கையே இதற்குக் காரணம்.

அறிக்கையில் இருந்தது என்ன?

"இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆராய்ச்சியும், புகையிலைப் பொருட்களால் புற்றுநோய் வரும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. வெளிநாடுகளின் 2 ஆய்வுகள்தான் அப்படி கூறுகின்றன. புகையிலையின் காரணமாக மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதில்லை.

இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தவேண்டியுள்ளது. மேலும் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இத்தொழிலின் வருவாய் ஆகியவற்றின் மீது ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டி இருக்கிறது.

எனவே எச்சரிக்கை செய்யும் படங்களை பெரிய அளவில் சிகரெட், புகையிலை பாக்கெட்டுகளில் அச்சிடவேண்டும் என்கிற முடிவை சுகாதார அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நாடாளுமன்ற குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் 8 பேர் பாஜக எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனிதாவின் கடைசி வேண்டுகோள்:

"குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் முதல் பிரதமர் நீங்கள். அதனால்தான் உங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுதுகிறேன். நம் தேசத்தில் புகையிலை பயன்படுத்துவோரில் படிப்பறிவு இல்லாதோர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு இத்தகைய புகைப்பட எச்சரிக்கை மிகவும் உபயோகமாக இருக்கும். எனவே, இந்த நடைமுறைக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோருகிறேன்."

இதுவே பிரதமர் மோடிக்கு சுனிதா முன்வைத்துள்ள கடைசி வேண்டுகோள்.

புகையிலை பயன்பாட்டால் தனது உயிரை இழந்த சுனிதா, மரணப் படுக்கையில் பிரதமருக்கு எழுதிய கடைசிக் கடிதம் தாக்கத்தை ஏற்படுத்துமா? பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

மோடிக்கு சுனிதா எழுதிய கடிதத்தின் விவரம்:

'மாண்புமிகு பிரதமருக்கு...

இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். நான், சுனிதா தோமர், ஒரு புற்றுநோயாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது எனக்கு வயது 26. அந்த அறுவை சிகிச்சை எனது உயிரைக் காப்பாற்றினாலும், என் வாழ்வு உருக்குலைந்துவிட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எனது முகத்தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. என்னை சந்திக்கவோ, என்னிடம் சகஜமாக பேசவோ பலரும் தயங்கினர். புகையிலை பயன்பாட்டின் மிகக் கொடூரமான விளைவை நான் சந்தித்திருக்கிறேன்.

உடல், மன, பொருளாதார, சமூக ரீதியாக நான் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகிறேன். திரவ உணவுகளை மட்டுமே என்னால் உண்ண முடியும். புற்றுநோய் பாதிப்பு என்னை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஆட்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை வேதனையுடன் நகர்த்துகிறேன்.

புகையிலை மிக எளிதாக கிடைக்கிறது. எனவே இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடிகிறது. சிறு பிள்ளைகள் புகையிலை பயன்படுத்துவதை பார்க்கும்போது நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

புகையிலை விற்பனையை தடை செய்ய வேண்டியது அவசியம். ஆனால், அதற்கு முன்னதாக புகையிலை விற்பனையை ஒழுங்கு செய்யும் சட்டம் இருந்தும் அது சரிவர நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது இன்னும் வேதனையளிக்கும் செயல். யாராவது புகையிலை பயன்படுத்துவதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

"Voice of Tobacco victims" (புகையிலை பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் குரல்) என்ற பிரச்சாரத்தின் மூலம் புகையிலையின் தீமையை எடுத்துரைக்க விரும்புகிறேன். எனது முயற்சியெல்லாம், புகையிலையில் இருந்து நிறைய பேரை காப்பாற்ற வேண்டும் என்பதே. புகையிலை உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

அண்மையில், புகையிலை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் திலீப் காந்தி சுகாதார அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தள்ளிவைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசுத் துறையில் இவர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பற்ற தன்மையுடன் நடப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இன்றளவும், புகையிலை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு அதன் தீங்கு தெரிவதில்லை. படிப்பறிவின்மையும், போதிய விழிப்புணர்வு இல்லாமையுமே இதற்குக்க் காரணம். பெரிய அளவிலான புகைப்பட எச்சரிக்கையை அச்சிடுவது புகையிலை பயன்படுத்தும் படிப்பறிவற்றவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இந்தியப் பிரதமர்களில் நீங்கள் ஒருவரே உங்கள் எண்ணங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் மக்கள் கருத்துகளுக்கு மரியாதை அளிக்கிறீர்கள். அதன் காரணமாகவே நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். வானொலியில், நீங்கள் போதைப் பொருள் தீமை குறித்து பேசினீர்கள். அதேபோல், புகையிலைக்கு எதிராகவும் பேசுவீர்கள் என நம்புகிறேன்.

மேலும், புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடும் சட்டப்பிரிவுக்கு நீங்கள் ஒப்புதல் வழங்குவீர்கள் என நான் எதிர்ப்பார்க்கிறேன். இந்த தேசத்தை புகையிலை அற்ற தேசமாக மாற்றுவீர்கள் என நம்புகிறேன்.'

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கைகளை முன்வைத்த சுனிதா இப்போது இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்