ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...2 - சுதாகரனின் பிரம்மாண்ட திருமணத்தில் தீர்ப்பு நிச்சயிக்கப்படுகிறது

By இரா.வினோத்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் குறுக்குவெட்டு தோற்ற‌த்தை எளிய மக்களுக்கும் மிக எளிதாக நினைவூட்டுவ‌து சுதாகரனின் பிரம்மாண்ட திருமணம். முக்கிய அரசியல் தலைவர்களின் அணிவகுப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரி, தோட்டாதரணியின் செட்டிங், மாண்டலின் ஸ்ரீனிவாஸின் இன்னிசை என 20 ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய அந்த ஆடம்பர திருமணம்தான், ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தீர்மானித்தது. மேல் முறையீட்டின் தீர்ப்பையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருப்பதும் அதுவே.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் (சாந்தி) வழி பேத்தி சத்தியலட்சுமிக்கும் 7.7.1995 அன்று திருமணம் நடந்தது. லாலுபிரசாத் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர் களும் ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகள், அலங்கார வளைவுகள், மேடைகள், மின் விளக்குகள், வரவேற்பு பலகைகள் அமைக்கப்பட்டன.

ஆடம்பர திருமண செலவு

இந்த திருமணத்துக்காக 7 லட்சம் சதுர அடிக்கு ஓலை பந்தல், ரூ.37 லட்ச செலவில் ஆடம்பர மேடை உட்பட பிரம்மாண்ட பந்தல்கள் அமைப்பதற்கு ரூ.5 கோடியே 21 லட்சத்து 23 ஆயிரத்து 532-ம், உணவு, தண்ணீர், தாம்பூலத்துக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரத்து 125-ம் செலவாகியுள்ளது. வெள்ளித் தட்டுகளுடன் கூடிய அழைப்பிதழ்களை தபாலில் அனுப்பிய வகையில் ரூ.2 லட்சத்து 24 ஆயிரமும் ஊழியர்களுக்கு உடை வாங்கியதற்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரமும் செலவாகியுள்ளது.

65 ஆயிரம் அழைப்பிதழ்கள், விஐபி களுக்கு வெள்ளித்தட்டு அழைப்பிதழ், சென்னையில் முக்கிய இடங்களில் மின்விளக்கு அலங்காரம், பட்டாசுகள், டோங்கா நடனம், கரகாட்டம், யானை, குதிரை ஊர்வல வண்டிகள், வீடியோ, இசை நிகழ்ச்சி, பரத நாட்டியம் உள்ளிட்டவற்றுக்கு லட்சங்களில் செலவழிக்கப்பட்டது. மொத்தமாக சுதாகரனின் திருமணத்துக்காக ஜெயலலிதா தரப்பு ரூ.6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 செலவு செய்துள் ளனர் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் நியமிக்கப்பட்ட‌ பொதுப்பணித்துறை அதிகாரி தங்கராஜன் (அரசு தரப்பு சாட்சி 181) மதிப்பீடு செய்தார்.

இதனை நிரூபிக்கும் வகையில் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு (அரசு தரப்பு சாட்சி 259) ஜெயலலி தாவின் ஆடிட்டர் ராஜசேகரன், முதல்வரின் உதவி செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர், ஏ.ஆர்.ரஹ்மான், தோட்டா தரணி, சிவாஜியின் மகன் ராம்குமார், மணமகளின் தந்தை நாராயணசாமி உட்பட 30-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

துல்லியமாக மதிப்பிட முடியுமா?

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

''உலக வரலாற்றிலேயே முதன் முதலாக இவ்வழக்கில்தான் ஒரு திருமணத் துக்கு ஆன செலவை சுமார் 2 ஆண்டுகள் கழித்து மதிப்பீடு செய்திருப்பார்கள் என கருதுகிறேன். திருமண ஆல்பத் தையும், வீடியோ பதிவுகளையும், பத்திரிகை செய்திகளையும், திருமணத் துக்கு வந்து சாப்பிட்டு போனவர் களையும் கொண்டு அந்த திருமண செலவை துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியுமா?

சுதாகரனின் திருமணச் செலவை ஜெயலலிதா செய்ததாகப் பொய் சாட்சிகள் மூலம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜோடித்துள்ளது. தமிழக முறைப்படி மணப்பெண் ணின் குடும்பத்தார்தான் திருமணச் செலவை செய்வார்கள். அதன்படி நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் (குற்றவாளிகள் தரப்பு சாட்சி 1) அனைத்து செலவையும் செய்தார். இத‌ற்கு அவர் வருமான வரியும் கட்டியுள்ளார். 1074 பேரை விசாரித்த நல்லம்ம நாயுடு, அரசுத் தரப்பு சாட்சியாக ராம்குமாரை சேர்க்காதது ஏன்?

திருமணத்துக்கு பந்தல் அமைத்த தோட்டா தரணி, இசைக்கச்சேரி நடத்திய ஏ.ஆர்.ரஹ்மான், மாண்டலின் னிவாஸ் ஆகியோர் ஜெயலலிதா, சிவாஜி வீட்டு திருமணம் என்பதால் ஒரு ரூபாய்கூட‌ கட்டணம் வாங்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி கரகாட்டக் கலைஞர்களுக்கு மட்டுமே ரூ 7,000-ஐ ராம்குமார் வழங்கினார். சிவாஜியின் திரைப்பட நிறுவனத்தில் அவரது இளையமகன் பிரபு நடித்த படங்களை வெளிநாடுகளில் விநியோகம் செய்ததன் மூலம் கிடைத்த பணம் ரூ.99 லட்சத்தை திருமணத்துக்காக ராம்குமார் செலவு செய்துள்ளார்''என்று வழக்கறிஞர் குமார் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி குன்ஹா,''திருமணத்தின்போது சிவாஜி உயிருடன் இருந்தாரா? அவரிடம் ஏன் விசாரிக்கவில்லை?” என கேட்டார்.அதற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் மவுனம் சாதித்தனர்.

குன்ஹாவின் திருமண கணக்கு

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ''சுதாகரனின் திருமண செலவுகள் குறித்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் எழுப்பிய கேள்விகள் நியாயமானவை. அரசுத் தரப்பு சாட்சியான பொதுப்பணித் துறை பொறியாளர் தங்கராஜன், ஜெயலலிதாவின் உதவிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.ஏஸ். அதிகாரி ஜவஹர் பாபுவை விசாரித்துள்ளார். இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

திருமண செலவுகளுக்கு மணமகளின் தந்தை நாராயணசாமி கொடுத்தது ரூ.14 லட்சம் மட்டுமே. மீதித் தொகை அனைத்தையும் ஜெயலலிதா கொடுத்துள்ளார்.

வட இந்திய அலங்கார நிபுண ரான பால்பாபுவுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், அடையாறு விநாயகர் கோயிலில் இருந்து எம்.ஆர்.சி. நகர் வரையிலான சாலையை செப்பனிட்ட சுப்பிரமணி, சாமி ஆகியோருக்கு ஜெயலலிதா தனது பெயரில் காசோலை வழங்கியுள்ளார். மேலும் ரமேஷ் என்பவருக்கு 65 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடித்தற்காக ரூ.11 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணத்தில் மண மக்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா தரப்பில் 11.09.1995 அன்று பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 660-ம் 'ராக் ஆர்ட்ஸ்' விளம்பர நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதேபோல 1984-85,1994-95 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு ஆடிட்டராக இருந்த ராஜசேகரனின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதில் 928 பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் முழுவதும் சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பான ரசீதுகள், செலவுகள் தொடர்பானவை. மேலும் அங்கு 1996-97-ம் ஆண்டு ஜெயலலிதா தாக்கல்செய்த வருமானவரி கணக்கில் சுதாகரன் திருமணத் துக்கு ரூ.29 லட்சத்து 92ஆயிரத்து 721 செலவு செய்துள்ளதாக குறிப்பிட்ட ஆவணமும் சிக்கியது.

சிவாஜி குடும்பம்

சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் சாட்சியத்தில்,''என் இளைய சகோதரி சாந்தியின் மகளின் திருமணத்துக்கான மொத்தச் செலவுகளையும் நானே ஏற்றுக்கொண்டேன். இதற்காக தனியாக வங்கிக் கணக்குத் தொடங்கி ரூ.99 லட்சம் செலவு செய்துள்ளேன்''என கூறியுள்ளார். ஆனால் அவர் தாக்கல் செய்த வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகலில் வங்கி கிளையின் முகவரி,முத்திரை இல்லை. அதில் அச்சாகி இருப்பதை நல்ல வெளிச்சத்தில்கூட படிக்க முடியவில்லை.இதை எப்படி ஓர் ஆதாரமாக ஏற்க முடியும்?

எனவே சுதாகரன் திருமணத் திற்கான பெரும்பாலான செலவுகள் போயஸ்கார்டன் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழ்கள் அச்சடித்தது, வி.ஐ.பிகளுக்கு வழங்கியது, உணவுப் பொருள்கள், இனிப்புகள், வி.ஐ.பி-கள் தங்குவதற்கான ஏற்பாடுகள், திருமணம் நடந்த இடம், வரவேற்பு நடந்த சாலைகள், அலங்கார மின் விளக்குகள், பத்திரி கைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் ஆகியவை அனைத்தும் ஜெயலலிதா தரப்பே செய்த‌து.

அதே நேரத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் சிலவற்றை ஏற்க முடியவில்லை.அடிப்படை ஆதாரங்கள், கூடுதல் ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுதாகரனின் திருமணத்துக்கு ரூ.3 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 செலவாகியுள்ளது.''

இவ்வாறு நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனுவில் சுதாகரனின் திருமணம் குறித்த‌ விசாரணையின்போது, நீதிபதி குன்ஹாவிடம் முன்வைத்த வாதத்தை, ஜெயலலிதா தரப்பு வழக்கறி ஞர்கள் நீதிபதி குமாரசாமியிடம் முன்வைக்க‌வில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மிகைப்படுத்தப்பட்ட திருமண மதிப்பீட்டை நாங்கள் ஆதாரத் துடன் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளோம்.அதனால் நீதிபதி குன்ஹா அந்த மதிப்பீட்டை ஏற்க மறுத்துவிட்டார்.

ஆனால் அவராக கணக்கிட்டு சுதாகரனின் திருமணத்துக்கு ரூ.3 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 செலவு செய்யப்பட்டதாக தீர்ப்பில் கூறியுள்ளார். எவ்வித ஆதாரமும் இல்லாமல் வரையறுக்கப்பட்ட இந்த தொகையை ஏற்காமல், வருமான வரித்துறை ஏற்றுக்கொண்ட ரூ. 29 லட்சத்து 92ஆயிரத்து 721 மட்டும் சுதாகரனின் திருமண செலவாக ஏற்க வேண்டும்''என கோரிக்கை விடுத்தனர்.

சற்று நேரம் புன்முறுவலுடன் இருந்த‌ நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, ''சிவாஜிக்கும்,எம்.ஆர்.ராதாவுக்கும் என்ன தொடர்பு?''என கேட்டார். நீதிபதி ஏன்தான் அப்படி கேட்டாரோ?

-தீர்ப்பு நெருங்குகிறது..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்