முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தின் வருமானம் குறித்து நீதிபதி டி'குன்ஹாவின் மதிப்பீடு மேல்முறையீட்டில் முரண்பட்ட விஷயமாக இருந்தது.
ஜெயலலிதாவின் தாய் சந்தியாவுக்கு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த ஜே.டி.மெட்லாவில் 11.35 ஏக்கர் நிலமும், பஷீராபாத் கிராமத்தில் 3.5 ஏக்கர் நிலமும் இருந்தது.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் நடத்திய சோதனை விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் கதிரேசன் (அரசு தரப்பு சாட்சி 256) மற்றும் ரெங்கா ரெட்டி மாவட்ட தோட்ட கலைத்துறை இயக்குநர் கே.ஆர்.லதா (அரசு தரப்பு சாட்சி 165) மற்றும் உதவி தோட்டக்கலைத்துறை அதிகாரி சஞ்சய்குமார் (அரசு தரப்பு சாட்சி 233) நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்.
அவர்களது வாக்குமூலத்தில், ''ஜெயலலிதாவுக்கு சொந்தமான 14.5 ஏக்கர் திராட்சை தோட்டத்தில் 'அனாப் இ சாஹி’ திராட்சை கொடிகள் (காஷ்மீர் வகை) 580 இருந்தன. அவற்றின் வயது 15. மேலும் 4 வயதான 1266 விதையற்ற திராட்சை கொடிகள் பயிரிடப்பட்டிருந்தன.
இது தவிர 1 ஏக்கரில் 96 கொய்யா மரங்களும், வரப்புகளில் தென்னை, வாழை, பப்பாளி பழ மரங்களும் இருந்தன. மேலும் 1 ஏக்கரில் கத்தரி, பாகற்காய் மற்றும் ரோஜா பயிரிடப்பட்டிருந்தது. இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்து 340 வருமானம் கிடைத்துள்ளது'' என்றனர்.
2 நாட்களில் அளக்க முடியுமா?
இதற்கு ஜெயலலிதா தரப்பு,''வருமானவரித்துறை தீர்ப்பாய சான்றிதழின்படி 1991-96 காலக்கட்டத்தில் திராட்சைத் தோட்டத்தில் இருந்து ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் வருமானமாக வந்துள்ளது. 5 ஆண்டு சாகுபடியை 2 நாட்களில் மதிப்பீடு செய்ய முடியுமா?'' என கேள்வி எழுப்பினர்
குன்ஹாவின் தனி மதிப்பீடு
இதற்கு நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில்,''அரசு தரப்பு சாட்சிகள் கதிரேசன், கே.ஆர்.லதா, சஞ்சய்குமார் ஆகியோர் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தின் வருமானம் தொடர்பாக அளித்துள்ள மதிப்பீடுகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றன. தோட்டக்கலைத்துறை அதிகாரி கே.ஆர்.லதா ரூ.5 லட்சத்து 78 ஆயிரத்து 340 வருமானம் எனக்கூறும் நிலையில் மற்றொரு தோட்டக்கலைத்துறை அதிகாரி கொண்டாரெட்டி ஜெயலலிதாவுக்கு 1991-96 காலகட்டத்தில் ரூ.6 லட்சத்து ஆயிரத்து 380 ரூபாய் கிடைத்திருக்கும் என கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஜெயலலிதா தனது திராட்சைத் தோட்ட வருமானமாக 1987-88-ல் ரூ.4.8 லட்சமும், 1988-89-ல் ரூ.5.5 லட்சமும், 1989-90-ல் 7 லட்சமும், 1992-93-ல் ரூ.9.5 லட்சமும் வருமான வரி செலுத்தியுள்ளார். இதை வருமான வரித்துறை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டு சான்றிதழ் அளித்துள்ளனர்.
திராட்சைத் தோட்டத்தில் 10 ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடைபெற்றதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அங்கு ஆண்டு வருமானம் ஓர் ஏக்கருக்கு ரூ.20,000 ரூபாய் என தெரியவருகிறது. எனவே 10 ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம். ஆக மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வருகிறது. இந்த தொகையே 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டம் மூலம் கிடைத்த வருமானமாக இந்த நீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது'' என மதிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஜெயலலிதா தரப்பு மேல்முறையீட்டில், ''ஹைதராபாத் திராட்சை தோட்டத்தின் வருமானம் தொடர்பான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மதிப்பீட்டை முற்றிலும் தவறானது என நீதிபதி டி'குன்ஹா ஒப்புக் கொண்டுள்ளார். 1974-ல் இருந்து 1996 வரை குறிப்பிட்ட ஆண்டுகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த திராட்சை தோட்ட வருமானத்தை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்த போது அவர்களது கோரிக்கையை வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த திராட்சை தோட்ட வருமானத்தை ரூ.52 லட்சத்து 50 ஆயிரத்தை உறுதி செய்வதற்காக 1999-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது எங்களது மதிப்பீட்டை ஏற்றுக் கொண்டு சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை நீதிபதி குன்ஹா ஏற்றுக் கொள்ளாமல் போனது ஏன்?’ என்று வாதிட்டனர்.
அதற்கு நீதிபதி குமாரசாமி, ''வருமானவரி தீர்ப்பாயம் அளிக்கும் சான்றிதழ்களை குற்றவியல் வழக்குகளில் ஏற்க முடியுமா?'' என கேள்வி எழுப்பினார். சிறிது நேரம் தனது ‘டேப்லெட்டில்’ அலசிய ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், ''வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் முடிவு குற்றவியல் நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக பிஹார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் மீதான வழக்கில் வருமான வரித் துறை தீர்ப்பாயம் அளித்த சான்றிதழை பாட்னா உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, ‘‘வருமான வரித்துறை தீர்ப்பாயம் அளித்த சான்றிதழை முக்கிய ஆதாரமாக கருதலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது'' என்றார்.
அதற்கு நீதிபதி,''ஐந்து ஆண்டுகளில் ஐந்து ஏக்கர் திராட்சை சாகுபடியில் ரூ.52.50 லட்சம் வருமா? அப்படியென்றால் அப்போது ஒரு கிலோ அனாப் இ சாஹி திராட்சை எவ்வளவு?'' என்றார். அதற்கு யாரிடமும் பதில் இல்லை.
-தீர்ப்பு நெருங்குகிறது
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago