நிலச் சட்டம் மீது பொய்களை பரப்பும் எதிர்க்கட்சிகள்: வானொலி நிகழ்ச்சியில் மோடி குற்றச்சாட்டு

By பிடிஐ

நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பி வருவதாகவும், அதன்மூலம் விவசாயிகள் தவறாக வழிகாட்டப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களுடன் வானொலியில் உரையாடும் 'மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சியின் 6-வது தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகளுக்காக பிரதமர் மோடி உரையாடினார்.

சுமார் 35 நிமிடம் நீடித்த இந்த உரையில், சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து அவர் விவரித்தார்.

அப்போது, "கடந்த 2013-ல் நிறைவேற்றப்பட்ட நிலச் சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தன. அந்தச் சட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. அதில் இருந்த குறைகளை களைந்திடுவதுடன், விவசாயிகள், கிராமங்களின் நலன்களும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

தற்போதைய நில மசோதாவில் விவசாயிகளுக்கு பயன்தரக்கூடிய எத்தகைய மாற்றத்தையும் சேர்க்க அரசு தயாராகவே உள்ளது. இதை ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நான் உறுதிபடத் தெரிவித்துள்ளேன்.

விவசாயிகளின் காவலனாக மக்கள் முன் வலம் வருவோர் (காங்கிரஸ்) போராட்டங்களை மேற்கொள்கிறார்கள். 120 ஆண்டு பழமை வாய்ந்த சட்டத்தை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் கையகப்படுத்த பயன்படுத்தி வந்தனர். இப்போது 2013-ம் ஆண்டு சட்டத்தை மேம்படுத்த முயற்சிக்கும் பாஜக கூட்டணி அரசை இலக்கு வைத்து செயல்படுகிறார்கள்.

புதிய மசோதாவில் 2013-ம் ஆண்டு சட்டத்தில் உள்ள அதே இழப்பீடு அம்சங்கள் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தரக் கூடியவை இந்தச் சட்டம் என்பதெல்லாம் அறவே இல்லை.

அரசு அல்லது அரசு, தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கு அரசு நிலம் கையகப்படுத்தும்போது விவசாயி ஒப்புதல் தேவையில்லை என்கிற பிரிவு புதிய சட்டத்தில் உள்ளது. இதே விதி முந்தைய சட்டத்திலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், எல்லாவித பொய்களும் புதிய சட்டம் மீது பரப்பப்படுகிறது. விவசாயிகள் தவறான வழிகாட்டப்படுகிறார்கள்.

2013-ம் ஆண்டு சட்டத்தில் குறைபாடுகள் இருந்தன. அவற்றை சரிசெய்து கிராமங்கள், விவசாயிகள், எதிர்கால சந்ததியினருக்கு நற்பலன் கிடைக்கச் செய்வதும், அவர்கள் மின்சாரம், குடிநீர் பெறவும் வழிவகுப்பதே இந்த அரசின் முயற்சி. புதிய மசோதாவில் குறை இருப்பதாக யாராவது கருதினால் அதை சரி செய்ய அரசு தயாராக உள்ளது.

எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்களை கேட்டு விவசாயிகள் முடிவு செய்யக்கூடாது என்பதே எனது வேண்டுகோள். என்னை நம்புங்கள், உங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்.

2013-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது அவசர கதியில் நில மசோதாவை நிறைவேற்றியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, விவசாயிகள் நலன் கருதி ஆதரித்தது. அவசரத்தில் செய்யும் எதிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். முந்தைய அரசு மீது நான் குறை சொல்லவில்லை. விவசாயிகள், அவர்களது குழந்தைகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே, சட்டத்தில் குறைகள் இருந்தால் அதை சரிசெய்வோம். இதுதான் எங்கள் முன்னுரிமை.

எந்த மாநிலமாவது முந்தைய சட்டத்தையே ஏற்கத் தயார் என்றால் அப்படியே செய்யட்டும். அதை அவர்கள் விருப்பம்.

ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, சுரங்கம் போன்ற அரசின் செயல்பாடுகளுக்கு அதிக நிலம் தேவைப்படுகிறது. அரசின் இதுபோன்ற 13 அம்சங்கள் 2013 சட்டத்தில் இடம்பெறாமல் போனது.

எனவே, இத்தகைய பிரிவுகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது 120 ஆண்டு பழமை வாய்ந்த சட்டத்தின்படிதான் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும். இது மிகப்பெரிய குறைபாடு ஆகும். புதிய சட்டத்தின்படி இதை சரிசெய்து இந்த 13 பிரிவுகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு 4 மடங்கு இழப்பீடு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இவை விடுபட்டிருந்தால் அதிகாரிகளுக்குத்தான் ஆதாயம்.

மேலும், நிலம் வழங்கும் விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கும். முதலில் நிலம் கையகப்படுத்தும்போது அரசு நிலம்தான் கவனத்தில் கொள்ளப்படும். அதற்குப் பிறகு விளைச்சலுக்கு உதவாத இடம், கடைசியாகத்தான் விவசாய நிலம். எனவேதான் விளைச்சலுக்கு உதவாத நிலம் பற்றி கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இழப்பீடு தொகையை குறைப்பதற்காக புதிய சட்டம் கொண்டுவருவதாக என் மீது பொய் சொல்கிறார்கள். அந்த பாவத்தை நான் செய்யமாட்டேன். நான் விவசாயிகளுக்கு எதிரி அல்ல. விவசாயிகள் எப்போதும் வறியவர்களாகவே இருக்க வேண்டும். நாடு வளம் பெறக்கூடாது என சதி நடக்கிறது. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது அல்ல" என்றார் பிரதமர் மோடி.

முன்னதாக, இந்த வானொலி நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டம், காதி மேம்பாடு, திறன் மேம்பாடு, ஊனமுற்றோர்களுக்கான கல்வி உதவித்தொகை, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு குறித்து பிரதமர் மோடி உரையாடியது நினைகூரத்தக்கது.

அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் அதே நேரம், இந்த நிகழ்ச்சி பொதிகை, விவித் பாரதி, எப்.எம். கோல்ட், ரெயின்போ வானொலி ஆகியவற்றில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்