ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு: அச்சத்தில் காஷ்மீர் மக்கள்; அரசு துரித நடவடிக்கை

By ஐஏஎன்எஸ், பிடிஐ

காஷ்மீர் மாநிலம் ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறும் அரசு நிர்வாகம் எச்சரித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அம்மாநிலத்தில் ஒரு நூற்றாண்டில் ஏற்பட்டிராத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஜீலம் நதியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வெள்ள அளவு அனந்தநாக் மாவட்டம் சங்கம் பகுதியில் 22.8 அடியாகவும், ராம் மனுஷி பாக் பகுதியில் 19 அடியாகவும், பந்திபூரா மாவட்டம் ஆஷிம் பகுதியில் 11.55 அடியாகவும் உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மாவட்ட நிர்வாக அதிகாரி, "வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் உள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு வருமாறும், மாவட்ட நிர்வாகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜீலம் நதிக் கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்:

ராஜ்பாக், ஜவஹர்நகர், கோக்ஜிபாக், வாசிர்பாக் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் கூடுதலாக இருப்பதால், இப்பகுதிகளில் வாழும் மக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதலே பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரத்தொடங்கினர். ரெசிடன்ஸி சாலை, லால் சவுக் பகுதிகளில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உள்ள பொருட்களை அவசர அவசரமாக இடம் மாற்றம் செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியின் கோரத் தாண்டவத்தில் சிக்கிய பகுதிகளில் இவைகளும் அடங்கும்.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்:

கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 80 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. சனிக்கிழமை மாலை முதல் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-குல்மார்க், ஸ்ரீநகர்-குப்வாரா, ஸ்ரீநகர்-பந்திப்பூரா இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெருமளவில் பாதுக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு:

மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழைவெள்ளம் ஒரு புறம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீட்புக் குழு விரைந்தது

தெற்கு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 100 பேர் காஷ்மீர் விரைந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் ஒரு குழுவில் 50 பேர் வீதம் 2 குழுக்களாக மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தலைவர் ஓ.பி.சிங் கூறியுள்ளார்.

அமைச்சர் பயணம்:

வெள்ள நிலவரத்தை நேரில் பார்வையிட மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி காஷ்மீருக்கு சென்றுள்ளார். ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை அறிந்ததும் பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் முக்தார் அப்பாஸ் நாக்வி காஷ்மீர் சென்றுளளார்.

காஷ்மீர் புறப்படும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாக்வி, "வெள்ள நிவாரண, மீட்புப் பணிகளில் காஷ்மீர் மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்