அக்னி ஏவுகணையை முதன்முதலாக இரவில் ஏவி வெற்றிகரமாக சோதனை

By செய்திப்பிரிவு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஏவுகணை முதல்முதலாக இரவு நேரத்தில் ஏவி வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் பலாசூரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவில் அமைந் துள்ள ஏவுதளத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணிக்கு ஏவப்பட்டது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வசதியுடைய இந்த ஏவுகணை 700 கி.மீ. தொலைவுக்குள் உள்ள இலக்கை குறிபிசகாமல் தாக்க வல்லது.

இந்த சோதனையை ராணுவம் மேற்கொண் டது. உந்து சக்திக்கு திட ரசாயன பொருள் பயன்படுத்தப்பட்டது. இந்த சோதனை திட்டத்தின் நோக்கங்கள் முழுமையாக நிறைவேறியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ரவி குமார் குப்தா தெரிவித்தார்.

இந்த சோதனையை ராணுவத்தின் சிறப்புப் பிரிவு அமைப்பு நடத்தியது என ஏவுதள இயக்குநர் எம்.வி.கே.வி.பிரசாத் தெரிவித்தார்.

அக்னி ஏவுகணையை இரவில் சோதித்துப் பார்ப்பது இதுவே முதல் தடவை. எந்த நேரத்திலும் நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை கருத்தில் கொண்டே இந்த சோதனை நடத்திப் பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அக்னி ஏவுகணையின் இரவு நேர சோதனை இதற்கு முன் இருமுறை திட்டமிடப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஏவுகணையானது உரிய இலக்கை அடைந்து துளியும் பிசகாமல் துல்லியமாக தாக்கவல்லது. 12 டன் எடை, 15 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 1000 கிலோ எடை சுமையை தாங்கவல்லது. ராணுவசேவை யில் இது ஏற்கெனவே சேர்க்கப்பட்டுவிட்டது. கடந்த முறையும் இதே தளத்திலிருந்து 2013 நவம்பர் 8ல் இந்த ஏவுகணை சோதனை முறையில் ஏவிப் பார்க்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE