ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி-11: பஜன்லால் மீதான வழக்கும், நல்லம்ம நாயுடுவின் விசாரணையும்

By இரா.வினோத்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் பலர் முயற்சித்த போதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அமைத்த அடித்தளத்தை யாராலும் அசைக்க முடியவில்லை என சொத்துக்குவிப்பு வழக்கை ஆதியில் இருந்து கவனித்துவரும் அதிகாரி ஒருவர் இறுதி விசாரணை நாளில் பெருமிதமாகக் கூறினார்.

“1964-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுக மான ஜெயலலிதா 1972 வரை பிரபல நடிகையாக வலம் வந்தார். 1971-ல் அவரது தாயார் சந்தியா மறைந்த போது ஜெயலலிதாவின் பெயருக்கு `கலாநிகேதன்' என்ற இசைப் பள்ளியும், போயஸ் கார்டன் வீடும், ஹைதராபாத் நகரில் ஒரு வீடும்,14.5 ஏக்கர் நிலமும் மாற்றப்பட்டது. 1987-ல் அவரது மொத்த அசையா சொத்துகள் ரூ.7.5 லட்சமும், வங்கி இருப்பு ரூ.1 லட்சமும் இருந்தன. 1989-ல் எம்பி-யாக இருந்தபோது 4 கார்கள் (மதிப்பு ரூ.9,12,129) 1 ஜீப் (மதிப்பு ரூ.1,04,000) வாங்கினார்.1991-ல் தமிழக முதல்வராவதற்கு முன் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2 கோடியே 1 லட்ச‌த்து 83 ஆயிரத்து 957.53 ரூபாயாக இருந்தது.

1.7.1991 முதல் 30.4.1996 வரை முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்றார். ஆனால் அவரது சொத்து மதிப்பு பல மடங் காக உயர்ந்திருக்கிறது. வ‌ருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக ஆளுநர் சென்னா ரெட்டியின் அனுமதியை பெற்று சுப்பிரமணியன் சுவாமி 14.6.1996 அன்று சென்னை மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து நீதிபதி ராமமூர்த்தி, ஜெயலலிதா மீதான புகாரை பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி லத்திகா சரணுக்கு உத்தரவிட்டார். திமுக ஆதரவு அதிகாரி யான லத்திகா சரண் இவ்வழக்கை விசாரிக்கக் கூடாது என ஜெயலலிதா நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றம் 4.9.1996 அன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் வி.சி.பெருமாளை விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக துணை காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு நியமிக்கப்பட்டார். இவ்வழக்கில் 18.9.1996 அன்று வி.சி.பெருமாள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார். பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு 4.6.1997 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை தனி நீதிமன்றத்தில் 1997-ம் ஆண்டு தொடங்கிய இவ்வழக்கின் விசாரணை அரசியல் தலையீடுகளின் காரணமாக 18.11.2003 அன்று பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. சாட்சி கள் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கம் பெறுதல், இறுதி வாதம் என எல்லாம் முடிந்து 27.9.2014 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார்'' என சொத்துக்குவிப்பு வழக்கின் டைரி சொல்கிறது.

ஜெயலலிதா தரப்பில், “சுப்பிரமணியன் சுவாமியால் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு அரசி யல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தொடுக்கப் பட்டது. அப்போதைய ஆளுநர் ஜெயலலிதாவுக்கு எதிரான மனநிலையில் தன்னிச்சையாக அவர் மீது வழக்கு தொடர அனுமதித்தார். அவரது முடிவில் உள்நோக்கம் இருந்ததால் இவ்வழக்கு பதிந்தது செல்லாது.

இதே போல திமுக ஆட்சியில் பணியாற்றிய வி.சி.பெருமாள் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். இவர் அதற்கு முன்பு எந்த காவல் நிலையத்திலும் ஆய்வாளராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவர். எனவே அரசியல் அழுத்தத்தின் காரணமாக வி.சி.பெருமாள் பதிந்த இவ்வழக்கு செல்லாது.

ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கை ஜோடிக்க வேண்டும் என்பதற்காக விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவுக்கு உடனடியாக 2 பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்தார் என்றால் பொது ஊழியரான அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். பொது ஊழியர் இல்லாத சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய் தனர். இதே போல மூவரும் பங்குதாரர்களாக இருந்த 32 தனியார் நிறுவனங்களையும் இவ் வழக்கில் இணைத்தனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரிடம் அடிப்படையாக எவ்வித விசாரணை யும் நடத்தாமல் நல்லம்ம நாயுடு தன்னிச்சை யாக செயல்பட்டார்.ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துகளையும் மதிப்பீடு செய்தவர் கள் 100 மடங்கு வரை மிகைப்படுத்தி மதிப்பிட் டுள்ளனர். இவ்வழக்கில் ஆரம்ப புள்ளியில் இருந்து இறுதி புள்ளி வரை அரசியல் உள் நோக்கம் கலந்திருக்கிறது.எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டனர்.

நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், “பொது ஊழிய ருக்கு எதிராக வழக்குத் தொடுக்க ஆளுநருக்கு அனுமதி கொடுக்க முழு அதிகாரம் இருக்கிறது.

தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண். எம்.எஸ். 963 மற்றும் சான்று ஆவணம் 2308,2309 படி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் காவல் நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய வி.சி.பெருமாளுக்கு காவல் ஆய்வாளர் தகுதியும் அதிகாரமும் வழங்கப் பட்டது. எனவே அவருக்கு குற்றம்சாட்டப்பட்ட வரை கைது செய்யவும் விசாரிக்க‌வும் அதிகாரம் இருக்கிறது. மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்ற விசாரணை அமைப்புக்கு முழு அதிகாரம் இருப்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

நல்லம்ம நாயுடுவின் நியமனம் சென்னை மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் ஒப்பு தலின்படியே நடந்துள்ளது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிந்ததும் செல்லும். ஏனெனில் மூவரும் இயக்குநராக இருந்த தனியார் நிறுவனங்களில் பின்ன‌ணியில் ஜெயலலிதா இருந்துள்ளார். அதே போல இவ்வழக்கில் 32 தனியார் நிறுவனங்களை இணைத்ததும் செல்லும்.

இவ்வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிரிகளால் தொடுக்கப்பட்டது என ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது, ‘ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் மட்டும் அல்ல,நீதிமன்றத்திலும் ஆக்கப்பூர்வமாக செயல்படும் பொறுப்பு இருக்கிறது.ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யும் போது அதை தடுக்கவும் மக்களிடம் தெரிவிக்கவும் எதிர்க்கட்சியினருக்கு முழு உரிமை இருக்கிறது'என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே இவ்வழக்கு விசாரணையின் மீது ஜெயலலிதா தரப்பு முன்வைத்த வாதத்தை நிராகரிக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

பஜன்லால் வழ‌க்கு

இதற்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், “சுப்பிரமணியன் சுவாமியின் புகாரை ஏற்ற சென்னை மாநகர முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, இதனை விசாரிக்க லத்திகா சரணை நியமித்தார்.குற்றவியல் நடைமுறை சட்டப்படி விசாரணை அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு நீதிமன்றம் ஆணை வெளியிட முடியாது. எனவே, சொத்துக்குவிப்பு வழக்கின் ஆரம்பப் புள்ளியிலேயே விதிமுறை மீறல் நடந்துள்ளது.

ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதான புகாரை ஐஜி., எஸ்.பி, ஆகிய உயர் பதவிகளில் உள்ள அதிகாரி மட்டுமே விசாரிக்க அதிகாரம் இருக்கிறது. துணை காவல் கண்காணிப்பாளரான நல்லம்ம நாயுடுவுக்கு முதல்வர் மீதான வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை.

நல்லம்ம நாயுடு திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாலே 2006-ம் ஆண்டு அவருக்கு திமுக அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது.

கடந்த 1991-ம் ஆண்டு ஹரியானா முதல்வர் பஜன்லால் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டது. முதல்வர் பதவியில் இருந்த பஜன்லால் மீதான புகாரை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கும் குறைந்த பதவியில் இருந்த அதிகாரி விசாரித்தார். அந்த அதிகாரி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை யை அடிப்படையாக கொண்டு வழக்கு நடைபெற்றது. ஆனால் உச்ச நீதிமன்றம் தகுதி குறைந்த அதிகாரி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி அந்த வழக்கையே தள்ளுபடி செய்தது. அதே போல் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்''என்றார்.

அதற்கு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “இவ் வழக்கில் அரசியல் அழுத்தங்கள் இருந்திருந் தாலும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் இவ்வளவு வலுவான வழக்கை உருவாக்க முடியாது. முதல் கட்டத்திலே விதிமுறை மீறல் நடந்திருந்ததால் இவ்வழக்கு 18 ஆண்டு காலம் வரை நீண்டு இருக்குமா?” எனக் கேள்வியெழுப்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்