ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பல நீதிபதிகள் விசாரித்துள்ளனர். அவர்களில் மல்லிகார்ஜுனையாவும், குன்ஹாவும் முக்கியமானவர்கள். தீர்ப்பு வழங்கியது டி’குன்ஹா என்றால் பெரும்பான்மை விசாரணையை முடித்தது மல்லிகார்ஜுனையா. மல்லிகார்ஜுனையாவுக்குப் பிறகு பாலகிருஷ்ணா, சோமராஜு, முடிகவுடர் ஆகிய நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். இறுதியாக டி’குன்ஹா வழக்கின் தீர்ப்பை வழங்கினார்.
விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனையா முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜெயலலிதா முதல்வராக இருந்த 91-96 காலகட்டத்தில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தமிழகம் முழுவதும் 197 இடங்களில் சுமார் 3,000 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.22.52 கோடி.1991-க்கு முன்னாள் வருமான வரி செலுத்தும் அளவுக்கு கூட வருமானம் இல்லாத மூன்று பேரால், எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு கிராமம் அளவுக்கு சொத்துக்கள் வாங்கப்பட்டது?'' எனக் கேள்வியெழுப்பினார் அவர்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகிய மூவரும் குடியேறினர்.அப்போது சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன்,மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ்,ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் டிவி பிரைவேட் லிமிடெட் என 32 தனியார் நிறுவனங்களை தொடங்கினர். இந்த நிறுவனங்களுடன் மூவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்தனர்.
தனியார் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனைக்காகவும், நிலம் வாங்குவதற்காகவும் பல்வேறு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்கினர். அந்த வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தனர்.
இதே போல தோட்டக்கலைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் (அரசு தரப்பு சாட்சி 71) அளித்துள்ள வாக்குமூலத்தில், “சுதாகரன் நிர்வாக இயக்குநராக இருந்த ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்காக 1994-ம் ஆண்டு தூத்துகுடி, திருநெல்வேலியில் மீரான்குளம், சேரகுளம், வல்லகுளம் ஆகிய கிராமங்களில் 1,163 ஏக்கர் உட்பட ஒரு ஏக்கர் ரூ. 16 ஆயிரம் விலையில் மொத்தம் 1,300 ஏக்கர் வாங்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.
மற்றொரு அரசு தரப்பு சாட்சி சார்பதிவாளர் ராஜகோபால், “சசிகலா நிர்வாக இயக்குநராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்காக காஞ்சிபுரம் மாவட்ட வெலகாபுரம், கருங்குழிப்பள்ளம், ஊத்துக்காடு, கலவை ஆகிய கிராமங்களில் 850 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சிறுதாவூரில் இசையமைப்பாளர் கங்கை அமரனிடம்(அரசு தரப்பு சாட்சி 40) இருந்து 25 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது'' என தெரிவித்துள்ளார்.
இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரிலும்,மூவரும் நிர்வாக இயக்கு நராக இருந்த 32 தனியார் நிறுவனங்களின் பெயரிலும் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக் காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சோழிங்கநல்லூர், செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என பல மாவட்டங்களில் 3,000 ஏக்கர் நிலம்,கட்டிடம்,கடைகள் வாங்கப்பட்டுள்ளது அரசு தரப்பில் தக்க ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என ஆதாரங்களுடன் வாதிட்டார்.
நிறுவனங்களின் சொத்து
இதற்கு மூவர் தரப்பிலும், “குறிப்பிட்ட 32 தனியார் நிறுவனங்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மூவரும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டுமே நிர்வாக இயக்குநர்களாக இருந்தனர். அதன் பிறகு மூவரும் பங்குதாரர்களாக மட்டுமே அங்கம் வகித்தனர். வாங்கப்பட்ட சொத்துகள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இயக்குநருக்கோ, பங்குதாரருக்கோ சொந்தமானவை அல்ல.
நிலம் அதிகமாக வாங்கப்பட்டதாக சொல்லப்படும் ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் பி.டி.ஷர்மா என்பவருக்கு சொந்தமானது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அந்த நிறுவனத்தை சுதாகரனுக்கு சொந்தமானது எனக்கூறியுள்ளது. ஆனால் இதற்கு போதுமான ஆதாரங்களை அரசு தரப்பில் சமர்ப்பிக்கவில்லை.
இதே போல மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் கிருஷ்ணா ரெட்டி, அணில் குமார் ரெட்டி ஆகியோருக்கு சொந்தமானது. ஆனால் சசிகலாவுக்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது. எனவே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை இவ்வழக்கில் இணைத்தது ஏற்கத்தக்கதல்ல'' என வாதிட்டனர்.
ஜெயலலிதாவின் பணம்
நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், “அரசுத்தரப்பு சாட்சி ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் சாட்சியத்தின்படி சசிகலாவின் ஒரே வருவாய் ஆதாரம் அவருடைய கணவர் நடராஜன் மட்டும்தான். அரசில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன் மோட்டார் சைக்கிள் வாங்கவும், வீடு வாங்கவும் கடன் வாங்கியுள்ளார்.1988-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்த நடராஜனுக்கு மன்னார்குடி அருகே மூன்றரை ஏக்கர் நிலமும், வீடும் மட்டுமே இருந்தது. சசிகலாவுக்கு வேறு எதுவும் சொந்தமாக இருக்கவில்லை.
அரசுத் தரப்பு சாட்சி பாலகிருஷ்ணனின் சாட்சியத்தின்படி,1992-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக விண்ணப்பித்த சுதாகரன் தன்னுடைய ஆண்டு வருமானம் ரூ.44 ஆயிரம் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். 1992-ம் ஆண்டுக்கு பிறகு சுதாகரனுக்கு வேறு வழியில் வருமானம் வந்ததாக ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.
இதே போல இளவரசிக்கும் பெரிய அளவில் வருமானமும், பூர்விக சொத்தும் இல்லை. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக இளவரசி சமர்ப்பித்த வருமானச் சான்றிதழில் ஆண்டு வருமானம் ரூ 48 ஆயிரம் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட 32 நிறுவனங்களுக்காக வாங்கப் பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நில பத்திர பதிவில் வாங்கப்பட்டவரின் பெயரோ, நிறுவனத்தின் முத்திரையோ பயன்படுத்தப்படவில்லை.ஆனால் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் பற்றிய ஆதாரங்களை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.மூலதனமே இல்லாத `ரப்பர் ஸ்டாம்ப்’ நிறுவனங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தன?
எனவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரின் பெயரிலும் உள்ள சொத்துகள் அனைத்தும் அவர்கள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறிய பிறகு குவித்த சொத்துகள்தான் என்பது தெரியவருகிறது. இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் பணத்தைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களின் பெயரில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவித்தது நிரூபிக்கப்பட்டுள்ளது''என குறிப்பிட்டுள்ளார்.
6 நிறுவனங்கள் மட்டும் மேல்முறையீடு
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து 32 தனியார் நிறுவனங்களில் 6 தனியார் நிறுவனங்கள் மட்டுமே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டின. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, “ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்களை இணைத்தது சட்டப்படி தவறு. தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களுடன் மட்டுமே தொடர்பு உள்ளது.மற்ற 30 நிறுவனங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை. இவ்வழக்கில் இருந்து தனியார் நிறுவனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்''என வாதிட்டனர்.
அப்போது நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “தனியார் நிறுவனங்களின் சொத்துகள் 1997-ம் ஆண்டு முடக்கப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள சொத்துக்களை விடுவிக்கக் கோரி தனியார் நிறுவனங்களின் சார்பில் நீதிமன்றத்தை உடனடி யாக நாடாதது ஏன்? திடீரென 1999-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்களை விடுவிக்க மனு போடப்பட்டது.அந்த மனு தள்ளு படி செய்யப்பட்டது.அதன்பிறகு அமைதியாக இருந்த தனியார் நிறுவனங்கள் சார்பில் 2014-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடியானது. சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்கள் என்றால் இவ்வளவு அலட்சியமாக தனியார் நிறுவனங்கள் நடந்துக்கொள்ளுமா?'' என்றார். அதற்கு தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆஜரான எந்த வழக்கறிஞரும் பதில் சொல்லவில்லை.
-இன்னும் வரும்
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago