டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.
பாஜகவுக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது.
புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளர் நூபுர் சர்மாவை 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பாஜக முதல்வர் வேட்பாளராக களம் இறங்கிய கிரண் பேடி கிருஷ்ணாநகர் தொகுதி யில் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.கே.பக்காவிடம் தோல்வியைத் தழுவினார். இதேபோல காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அஜய்மக்கான், கசர் பசார் தொகுதியில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
67 இடங்களில் வெற்றி
மொத்தமுள்ள 70 சட்டப்பேர வைத் தொகுதிகளில் 67 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. கடந்தமுறை 28 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்தமுறை கூடுதலாக 39 இடங்கள் கிடைத்துள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 32 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆனால் இந்த முறை முஸ்தபாபாத், ரோஹிணி, விஸ்வாஸ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த முறையை போலவே தனது கூட்டணிக் கட்சியான அகாலி தளத்துக்கு ஐந்து இடங்களை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 65 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இதில் அகாலி தளத்துக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் அந்தக் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது.
காங்கிரஸுக்கு பூஜ்ஜியம்
கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியது. இந்த முறை டெல்லி யின் அனைத்து தொகுதிகளில் போட்டியிட்டும் ஓர் இடம்கூட அந்தக் கட்சிக்கு கிடைக்கவில்லை.
வீசாத ‘மோடி அலை’
மக்களவை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக அடுத்தடுத்து நடைபெற்ற ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிவாகை சூடி ஆட்சி அமைத்தது.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் இரண்டாவது இடம் பெற்றதால் அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
‘மோடி அலை’ காரணமாக டெல்லியிலும் பாஜக வெற்றி பெறும் என்று அந்தக் கட்சித் தலைவர்கள் பெரிதும் நம்பினர். ஆனால் அந்தக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
கட்சிகளின் வாக்கு சதவீதம்
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 67.1 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மிக்கு 54.3, பாரதிய ஜனதாவுக்கு 32.2, காங்கிரஸுக்கு 9.7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
கடந்த தேர்தலைவிட ஆம் ஆத்மிக்கு 25 சதவீதம் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. பாஜகவிற்கு ஒரு சதவீதம், காங்கிரஸுக்கு 15 சதவீத வாக்குகள் குறைந்துவிட்டன.
இதர கட்சிகள் நிலை
டெல்லி தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம், சிவசேனா, இந்து மகாசபா மற்றும் இடது சாரி கட்சிகளும் போட்டியிட்டன. இதில் இடதுசாரி கூட்டணி கடைசி நேரத்தில் தனது ஆதரவை கேஜ்ரிவாலுக்கு அளிப்பதாக அறிவித்தது. முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை இந்தமுறை போட்டியிடவில்லை.
ராஜினாமா செய்த அதே நாளில்..
கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைத்தும் அந்தக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
28 தொகுதிகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 49 நாள் ஆட்சிக்குப் பிறகு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் முதல்வர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு ராஜினாமா செய்த அதே பிப்ரவரி 14-ல் இப்போது தனிப்பெரும்பான்மையுடன் அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ஆம் ஆத்மி கட்சியால் திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 15-ல் நடைபெற இருப்பதால் ஒருநாள் முன்னதாக ராம்லீலா மைதானத்தில் தனது அமைச்சர வையுடன் பொதுமக்கள் முன்னிலையில் கேஜ்ரிவால் பதவி ஏற்க இருக்கிறார்.
டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சி யின் சட்டப்பேரவைத் தலைவராக அர்விந்த் கேஜ்ரிவால் தேர்ந்தெடுக் கப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தேர்தலில் தோல்வி: மக்கான் விலகல்
டெல்லி தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
டெல்லி தேர்தலில் நான் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்து செயல்பட்டேன். ஆனால் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம். அதற்கு நானே தார்மீக பொறுப்பேற்கிறேன். அதனால் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறேன். இந்தத் தேர்தலில் வெற்றியடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago