’ஆண்டின் சிறந்த ஆளுநர் ரகுராம் ராஜன்: பிரிட்டன் பத்திரிகை கவுரவிப்பு

By பிடிஐ

பிரிட்டன் பத்திரிகையான செண்ட்ரல் பேங்கிங் தனது 2015-ஆம் ஆண்டுக்கான விருதுகளில் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை வங்கிகளுக்கான ‘சிறந்த ஆளுநர்’ விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

இது குறித்து அந்த இதழ் குறிப்பிடும் போது, “ஆளுநராக முதல் ஆண்டே ரகுராம் ராஜன் மிக ஒழுக்கமாக, மிகுந்த கவனத்துடன் மத்திய ரிசர்வ் வங்கியை தலைமையேற்று நடத்தியுள்ளமை அபாரமானது” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த விருது லண்டனில் மார்ச் 12-ஆம் தேதி வழங்கப்படுகிறது.

செண்ட்ரல் பேங்கிங் இதழின் ஆசிரியர் கிறிஸ்டபர் ஜெஃப்ரி கூறும்போது, "அவர் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்ற போதிலும், இந்திய பொருளாதார நிலைமைகளுக்கான ஆதாரமான காரணங்கள் பற்றிய அவரது ஆழமான புரிதலும், செறிவான பகுப்பாய்வுகளும், இதனடிப்படையில் மேற்கொண்ட கொள்கை நடவடிக்கைகளும் இந்திய பொருளாதாரம் பற்றிய சிந்தனை மாற்றங்களில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்துள்ளன.” என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பன்னாட்டு நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) தலைமைப் பொருளாதார நிபுணராக அவர் பணியாற்றியுள்ளார். உலக பணப்பரிவர்தனை மற்றும் நிதியாதாரக் கொள்கைகளில் உள்ள வரவேற்க முடியாத போக்குகள் குறித்த ரகுராம் ராஜனின் பார்வையும் மாற்றத்திற்கான ஒரு குரலாக உள்ளது என்கிறார் ஜெஃப்ரி.

"புதிய சிந்தனைகளுடன் கூடிய வலுவான தலைமையேற்பு திறமைகள் ரகுராம் ராஜனை மத்திய வங்கித்துறையில் ஒரு உத்வேகமூட்டும் ஆளுமையாகச் செய்துள்ளது” என்று ஜெஃப்ரி மேலும் தெரிவித்தார்.

இந்த விருதினை ஏற்றுக் கொண்ட ரகுராம் ராஜன், “ஆண்டின் சிறந்த வங்கி ஆளுநர் விருதுக்கு என்னைத் தேர்வு செய்ததை கவுரவமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம், பகுதியளவில் நம் பொருளாதாரத்தின் பரந்துபட்ட நிலைத்தன்மைக்காகப் பாடுபட்ட ரிசர்வ் வங்கி மற்றும் அதன் ஊழியர்களைச் சாரும்.

எந்த ஒர் மத்திய வங்கியும் தனித்துச் செயல்படுவதில்லை. அரசின் பங்கு இதில் அதிகம். நிதித்துறையில் சீர் தன்மையை பராமரித்தல், வளர்ச்சிக்கு சாதகமான உள்கட்டமைப்பு சீர்திருத்தங்கள், லட்சியம் சார்ந்த நிதித்துறை சார்ந்த புதிய திட்ட அறிமுகங்கள், அதாவது அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற புதிய திட்டங்கள் ஆகிய அரசின் பங்களிப்பும் எந்த ஒரு பொருளாதாரமும் வெற்றியடைய முக்கியமானதாகும்.

மேலும், எங்களது கூட்டுச் செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் வேலைப்பாடாகும். பணவீக்கம் முற்றிலும் குறைக்கப்பட வேண்டும், வங்கிகளில் செயலில் இல்லாத சொத்துகள் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும்.

ஆனால், சரியான திசை நோக்கியே சென்று கொண்டிருக்கிறோம் என்பதில் நான் திருப்தி அடைந்துள்ளேன். வளர்ச்சியும் இதனை ஒப்புக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.”

இவ்வாறு கூறினார் ரகுராம் ராஜன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE