பிரதமர் கிராம சாலை பராமரிப்பு கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த அரசு முயற்சி

By செய்திப்பிரிவு

நாடு முழுவதிலும் பிரதமர் கிராம சாலை பராமரிக்கும் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தும் முயற்சியில் மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது.

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கிராம வளர்ச்சித் துறையின் துணை செயலாளர் மஞ்சு ராஜ்பால், கடந்த 2013-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி ஒரு கடிதம் அனுப்பினார். அதில், தேசிய கிராமப்புற சாலை வளர்ச்சி அமைப்பானது பன்னாட்டு உழைப்பு மையத்துடன் இணைந்து பிரதமர் கிராம ஆலோசனை திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலை களை பராமரிக்கும் பொருட்டு ஒரு கொள்கையை உருவாக்கி இருப்பதாகவும், இதை மாநிலங்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றி, டிசம்பருக்குள் அனைத்து மாநிலங்களும் அமல் படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இதில் ஆச்சரியப்படும் வகையில், உத்தரப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே அதை அமல் படுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. மற்ற மாநிலங்களும் இந்த கொள்கையை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், அதற்காக நிதியளிக்க தயாராக இருப்பதை எடுத்துக் கூறியும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை புதிய உத்தரவை அளிக்கத் தயாராகி வருகிறது.

இது குறித்து ‘தி இந்து' விடம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும் போது, "சாலை பராமரிப்பு கொள்கை இல்லாமல் பிரதமர் கிராம சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகள் வீணாகி வருகின்றன. இதன் மீது எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி, ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 50 ஆயிரம் கி.மீ. சாலைகள் வீணாகின்றன. இவற்றை காக்கும் வகையில் உடனடியாக அனைத்து மாநிலங்களும் பராமரிப்பு கொள்கையை அமைக்கச் செய்ய வேண்டும் அவற்றுக்கு மத்திய அரசு நிதியளிக்கும்" என்றனர்.

இந்த திட்டம், முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் அறிமுகப்படுத் தப்பட்டது.

இந்த திட்டத்தின்படி இதுவரை சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவில் நாடு முழுவதிலும் கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை தமிழகம் உட்பட பல மாநிலங்கள் தங்கள் சொந்த செலவில் பராமரித்து வந்தமையால், மத்திய அரசு பரிந்துரைத்த பராமரிப்பு கொள்கை பற்றி கவலைப்படாமல் இருந்து வந்ததாக அந்த அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE