இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைமுறையில் திருத்தம் அவசியம்: சோனியா காந்தி யோசனை

இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே கட்சியை வலுப்படுத்த குறிப்பாக இளைஞர் பிரிவுக்கு உயிரூட்ட காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக கட்சியின் அனைத்து மாநிலத் தலைவர் களுக்கும் தேசிய தலைவர் சோனியா காந்தி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை கட்சித் தலைமைக்கு மாநிலத் தலைவர்கள் அளிக்க வேண்டும். காங்கிரஸ் இளைஞர் பிரிவில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

இளைஞர் பிரிவு நிர்வாகிகள் தேர்தலில், பண பலமும் ஆள் பலமும் உடையவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேர்தல் நடைமுறைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெறும் தலைவர்கள், தங்களுக்கென தனிக் குழுவை உருவாக்க வேண்டும். மாவட்ட வாரியாக அடிக்கடி உட்கட்சி ஆலோசனை கூட்டங்களை நடத்த மாநிலத் தலைமை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதில் கட்சியின் கொள்கை, அமைப்பு,கள் தகவல் தொடர்பு, அரசியல் நடவடிக்கைகள் குறித்து தொண்டர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுமார் 450 இடங்களில் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களின் அடிப்படையில் சோனியா காந்தி இந்தத் கடிதத்தை எழுதியுள்ளார்.

நடுத்தர குடும்பத்தினரை இலக்காக வைத்து வாக்குகளைச் சேகரிக்க வேண்டும், நடுத்தர வர்க்க இளைஞர்களை கட்சியில் அதிகமாக சேர்க்க வேண்டும் என்றும் சோனியா காந்தி அறிவுரை வழங்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் இளைஞர் பிரிவும் தனித்தனியாக செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தக் குறையைக் போக்கும் வகையில் இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் சோனியா அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE