எல்லையில் அத்துமீறல்: இந்திய வீரர் மரணம்; பதில் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி

By செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.

இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

சம்பா சரகம், எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஐஜி ராகேஷ் சர்மா கூறியதாவது:

சர்வதேச எல்லையில் இந்திய வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடு பட்ட போது, பாகிஸ்தான் தரப் பிலிருந்து தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், ஸ்ரீராம் கவுரியா என்ற வீரர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.

இந்திய வீரர்கள் கடும் பதிலடி கொடுத்தனர். இதில், 4 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். தங்கள் வீரர்களின் மரணத்தால் பாதிப்படைந்த பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக் கொடி காட்டி, தாக்குதலை நிறுத்தும்படி கோரியது. இறந்த வீரர்களின் உடலை எடுத்துச் செல்வதற்காக பாகிஸ்தான் ராணுவம் அவ்வாறு கோரியது. அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் நாம் தாக்குதலை நிறுத்தி, எல்லைக்கு அருகே வந்து, நான்கு வீரர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதித்தோம். தற்போது, எல்லையில் துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தும் 2-வது தாக்குதல் இதுவாகும்.

கடந்த ஒரு வாரத்தில் 6-வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 2014-ம் ஆண்டில் 550-க்கும் மேற்பட்டமுறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளில் அதிக முறை நடத்தப்பட்ட தாக்குதலாகும். துப்பாக்கிகள், கனரக ஆயுதங்கள், சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட்-அக்டோபர் காலகட்டத்தில் பாகிஸ் தான் நடத்திய தாக்குதலில் 13 பேர் இறந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஊடுருவல் முயற்சி

இதனிடையே சம்பா மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லைக்குள் தீவிரவாதக் கும்பல் ஊடுருவ முயன்றது. அவர்கள் மீது எல்லை பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE