லஞ்சம் வாங்கினால் சிறை: தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை

லஞ்சம் வாங்கினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், வாரங்கலில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள சந்திரசேகர ராவ், நேற்று லட்சுமிபுரத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசும்போது, “பொது மக்களுக்கு பணி செய்யவே அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக இவர்களுக்கு போதிய ஊதியமும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ஆனால் சிலர் லஞ்சம் வாங்கியே பழகியுள்ளனர். லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க அரசு முடிவு செய்துள்ளது. 040-23454071 என்ற இலவச தொலைபேசி எண்ணில் இது தொடர்பாக புகாரை பதிவு செய்தால் உடனடியாக நானே அதை விசாரித்து, சம்மந்தப்பட்ட ஊழியரை சிறைக்கு அனுப்புவேன். அதேபோன்று பொது மக்களாகிய நீங்களும் லஞ்சம் கொடுக்கும் எண்ணத்தை கைவிடுங்கள். லஞ்சம் கேட்பவரை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

இதேபோன்று மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்பட வேண்டும். காலிக் குடங்களுடன் பெண்கள் தண்ணீருக்காக அலையக் கூடாது. இதுபோன்ற சம்பங்கள் என் கவனத்துக்கு வந்தால் அத்தொகுதி எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைப்பேன். இதுவரை எந்த முதல்வரும் செய்யாததை நான் செய்வேன். ஆகையால் எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதிகளில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE