காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ஏற்றால் கட்சி வரவேற்கும்: அசோக் கெலாட் கருத்து

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டால், கட்சி முழுவதும் அதை வரவேற்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கூறினார்.

இதுகுறித்து அவர் ஜெய்ப்பூரில் நேற்று கூறும்போது, “இளமை துடிப்புமிக்க ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமை பொறுப்புக்கு வருவதை கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் விரும்புகிறோம். கட்சித் தலைவர் பதவியை இன்றோ அல்லது நாளையோ அவர் எப்போது வேண்டுமானாலும் ஏற்கலாம். அதை வரவேற்க தயாராக உள்ளோம்.

என்றாலும் கட்சித் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் காரிய கமிட்டிதான் இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றால் காங்கிரஸ் கட்சி வலுவடையும். கட்சியை புதுப்பிக்கும் பணியில் கட்சித் தொண்டர்கள் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள்” என்றார். ராஜஸ்தான் பாஜக அரசு பற்றி அசோக் கெலாட் கூறும்போது, “மாநிலத்தில் கடந்த 14 மாதங்களாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. அரசு ஊழியர்கள் எந்தப் பணியும் இல்லாமல் அமர்ந்துள்ளனர்” என்றார்.

மாநில உள்ளாட்சித் தேர்தல் பற்றி அவர் கூறும்போது, “மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுடன் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE