மத்திய அரசுக்கு எதிராக ஜனதா கட்சிகள் இன்று மெகா தர்ணா

By செய்திப்பிரிவு

மத்திய அரசுக்கு எதிராக ஜனதா கட்சிகள் இணைந்து டெல்லியில் இன்று மெகா தர்ணாவை நடத்துகின்றன.

சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம், சமாஜ்வாதி ஜனதா ஆகிய 6 கட்சிகள் ஒரே கட்சியாக இணைய தீர்மானித்துள்ளன.

நாடாளுமன்றத்துக்கு உள்ளே இந்த கட்சிகள் தற்போது ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக டெல்லி ஐந்தர் மந்தரில் இன்று 6 கட்சிகளும் இணைந்து மெகா தர்ணாவை நடத்துகின்றன. இந்தப் போராட்டத்தின்போது கருப்பு பண விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப ஜனதா கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பிஹார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே அந்த மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளமும் பிரதான கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ஒன்றிணைவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிஹாரில் கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 31-ல் பாஜக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்டிரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. 10 தொகுதிகளில் 6 இடங்களை நிதிஷ்-லாலு கூட்டணி கைப்பற்றியது. எனவே அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் பாஜகவுக்கு எதிராக நிதிஷும் லாலுவும் இணைந்து செயல்பட உள்ளனர்.

டெல்லியில் இன்று நடைபெறும் மெகா தர்ணாவை தொடர்ந்து இரு கட்சிகளும் ஒன்றிணைவது தொடர்பாக அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE