ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ‘ஸ்மார்ட்’ காவல் நிலையம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ‘ஸ்மார்ட்’ காவல் நிலையம் ஏற்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் ‘ஸ்மார்ட்’ காவல் நிலையம் ஏற்படுத்தப்படும். இதற்கான பகுதி மற்றும் அது தொடர்புடைய விவரங்களுடன் ஒவ்வொரு மாநில அரசும் தனது பரிந்துரையை வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்” என்றார்.

ராஜ்நாத் சிங் உத்தரவின்படி, இந்த காவல் நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. இதுதவிர அடுத்த நிதியாண்டில் இதுபோல் மேலும் பல காவல் நிலையங்களை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இந்த ‘ஸ்மார்ட்’ காவல் நிலையங்கள் காற்றோட்டமாகவும், இயற்கை வெளிச்சத்துடனும் கட்டப்படும். வருகையாளர்களுக்கு காத்திருக்கும் இடம், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள், காவலர்கள், பெண் காவலர்களுக்கு தனித்தனியே ஓய்வறை, ஆவணங்களுக்கான அறை, தகவல் தொடர்புக்கான ஒயர்லெஸ் அறை, கம்ப்யூட்டர்கள், கண்காணிப்பு கேமராக்கள், பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்வதற்கான தானியங்கி இயந்திரம் போன்ற வசதிகள் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

பெங்களூரு சம்பவத்தில் என்ஐஏ விசாரணை?

பெங்களூருவில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்து ராஜ்நாத் சிங் கூறும்போது, “இது தொடர்பாக நமது விசாரணை அமைப்புகள் தகவல்களை திரட்டி வருகின்றன. கர்நாடக அரசுடன் நாங்கள் நேரடியாக பேசிவருகிறோம். 24 மணி நேரத்தில் அனைத்து தகவல்களும் திரட்டிவிட முடியும் என நம்புகிறேன். இதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைக்கான திட்டம் வகுக்கப்படும்.

கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டனர். மாநில அரசிடம் இருந்து கூடுதல் விவரங்களுக்காக காத்துள்ளோம். தேவைப்பட்டால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக் கப்படும்.

தாக்குதலுக்கான காரணம், இதில் தொடர்புடைய அமைப்பு பற்றி இப்போது எதுவும் கூற முடியாது” என்றார்.

கண்காணிப்பு கேமரா நிறுவ அறிவுறுத்தல்

ராஜ்நாத் மேலும் கூறும்போது, “அனைத்து முக்கிய நகரங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவவேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இதன் மூலம் உரிய விசாரணை மேற்கொள்ள முடியும். பெங்களூரு உள்ளிட்ட மிகப் பெரிய நகரங்களில் கண்காணிப்பு கேமராக்களை கர்நாடக அரசு விரைந்து நிறுவவேண்டும். இவற்றை அமைப்பதில் ஏதேனும் பிரச்சனை என்றால் மாநில அரசுகளுக்கு நாங்கள் உதவிடத் தயாராக உள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE