போடோ தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்: நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. போடோலாந்து தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

அசாமில் போடோலாந்து தீவிரவாதிகளால் 78 பேர் கொல்லப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார்.

அசாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி எஸ் என்.டி.எப்.பி-எஸ்) என்ற தீவிரவாத அமைப்பு 5 கிராமங்களில் ஆதிவாசியினர் மீது கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 78 பேர் உயிரிழந்தனர்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வன்முறை யால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று பார்வையிட்டனர்.

இதன்பின்னர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போடோலாந்து தீவிரவாதி களின் தாக்குதல் சாதாரண வன்முறை அல்ல. திட்டமிட்ட பயங்கரவாதம். எந்தவொரு வடிவத்திலும் பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. அதே கொள்கைதான் இப்பிரச்சினையிலும் பின்பற்றப் படும்.

எல்லைப் பகுதி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தும். மேலும் கூடுதல் பாது காப்புப் படையினர் அசாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராணுவம் தேடுதல் வேட்டை

போடோலாந்து தீவிரவாதி களைத் தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. சுமார் 5,000 துணை ராணுவப்படையினர் அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE