வறுமையால் பெண் குழந்தையை ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற தம்பதி கைது: வாங்கியவர்களும் சிக்கினர்

ஆந்திராவில் வறுமை காரணமாக 3 மாத பெண் குழந்தையை விற்ற தம்பதியையும் குழந்தையை வாங்கியவர்களையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

ஹைதராபாத் அருகில் உள்ள சிலகலகூடா பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சாய் குமார். இவரது மனைவி ஷாலினி. இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் 7-ம் தேதி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது என கருதினர். இதை அறிந்த அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விற்றுத் தருவதாகக் கூறி உள்ளார். இதை நம்பி குழந்தையை விற்க பெற்றோர் ஒப்புக்கொண்டதையடுத்து, மருத்துவமனை ஊழியர், குழந்தைப் பேறு இல்லாத ராஜு, பவானி தம்பதிக்கு ஷாலினியின் குழந்தையை விற்று முன் பணமாக ரூ.15 ஆயிரத்தை பெற்றுத் தந்தார். ஆனால் குழந்தையை வெறும் 25 ஆயிரத்துக்கு மட்டுமே பேரம் பேசி உள்ளார். மீதமுள்ள 10 ஆயிரத்தை ஊழியர் எடுத்துக்கொண்டார்.

சில நாட்கள் கழித்து ஷாலினி தம்பதி மீதமுள்ள பணத்தைத் தரும்படி ஊழியரிடம் கேட்டுள்ளனர். இதற்கு குழந்தை இறந்துவிட்டதாக அவர் கூறி உள்ளார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த ஷாலினி தம்பதியினர், தங்கள் குழந்தை காணாமல் போனதாகவும் அந்த குழந்தை தற்போது பவானி, ராஜு தம்பதியிடம் உள்ளதாகவும் சிலகலகூடா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ் பெக்டர் நிவாசுலு நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது. பின்னர் சட்டவிரோதமாக குழந்தையை விற்ற ஷாலினி, சாய்குமார் மற்றும் குழந்தையை வாங்கிய ராஜு, பவானி ஆகி யோரை கைது செய்தனர்.

அரசு மருத்துவமனை ஊழியர் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE