உத்தரப் பிரதேசத்தில் பிகே படத்துக்கு வரி விலக்கு

'பிகே' படத்துக்கு நாடு முழுவதும் இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த திரைப்படத்துக்கு உத்தரப் பிரதேச அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

பிரபல இந்தி நடிகர் ஆமீர் கான் நடித்து வெளிவந்துள்ள 'பிகே' படத்தைத் தடை செய்யக் கோரி, நாடெங்கும் பல இடங்களில் பஜ்ரங் தளம், விஷ்வ இந்து பரிஷத் ஆகிய இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீர், அகமதாபாத், போபால், மும்பை, ஆக்ரா ஆகிய இடங்களில் உள்ள சுமார் 60 திரையரங்குகளை இந்து அமைப்புகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த நிலையில், 'பிகே' படத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் குறிப்பிடும்போது," 'பிகே' படத்தை முதல்வர் அகிலேஷ் யாதவ் முழுமையாக பார்த்தார். அதன் பின்னர் இத்தகைய படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE