கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசு என்பதை உறுதிசெய்தது பாஜக: காங்கிரஸ் காட்டம்

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்து, அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளதன் மூலம், பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது என்பதை உறுதிப்படுத்திவிட்டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

மேலும், மத்திய அரசின் இந்த விவசாயிகள் விரோத சட்டத்திருத்தத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மனிஷ் திவாரி கூறுகையில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆட்சி நடத்துகிறது" என சாடியுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், "நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவுற்று ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்து கூடும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அவசரச் சட்டங்களை நிறைவேற்றி தான் நினைத்தவற்றை சாதிக்கும் பாஜக அரசின் இத்தகைய திட்டங்கள் வெகு நாட்களுக்கு நீடிக்காது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE