முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம்: கேரளாவின் மனு தள்ளுபடி

முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவை 142 அடியாக உயர்த்த அனுமதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி, அதே ஆண்டு மார்ச் 18-ம் தேதி கேரள சட்டசபை யில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

மூவர் குழு

தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, ஹெச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோக்கூர், எம்.ஒய்.இக்பால் அடங்கிய அமர்வு கேரள அரசின் சட்டத்தை ரத்து செய்தது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்ததுடன், அணை நிர்வாகத்தை ஏற்க மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்து நீதிபதிகள் கடந்த மே 7-ம் தேதி உத்தரவிட்டனர்.

மூவர் குழு அணை பராமரிப்பு பணிகளை கவனித்து வருகிறது. இந்நிலையில், அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில் கூறியிருந்ததாவது:

முல்லைப் பெரியாறு அணையை 1886-ம் ஆண்டு 999 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கி, அப்போதைய பிரிட்டிஷ் அரசுக்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தமிழகம் உரிமை கோருகிறது. இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கதா என்பதே கேள்விக்குரிய விஷயம். இதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

அடிப்படை உரிமை

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் உறுதி தன்மை, ஆய்வு முடிவுகள், சோதனை விவரங்கள் ஆகியவற்றை மத்திய நீர்வள ஆணையம் முறைப்படி கேரள அரசுக்கு தெரிவிக்கவில்லை. இது, அடிப்படை உரிமையை மீறிய செயலாகும். இதையும் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. தவறான தகவல்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அணை உடைந்தால், கேரளாவில் நீர்ப்பிடிப்பு பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பும் தீர்ப்பு வழங்கும் முன் கருத்தில் கொள்ளப்படவில்லை. அணை யின் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்து வதன் மூலம், தமிழகத்துக்கு கிடைக்கும் சொற்ப ஆதாயத் துக்காக பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் மற்றும் உடமையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். மறு ஆய்வு விசாரணையை வெளிப்படையாக நீதிமன்றத்தில் நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அரசியல் சாசன அமர்வு

இம்மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, சலமேஸ்வர், மதன் லோக்கூர், எம்.ஒய்.இக்பால், சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அனைத்து ஆய்வு முடிவுகள், அணையின் பாதுகாப்பு, உறுதித் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்த பிறகே 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தமிழகம் சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கூடிய எந்த முகாந்திரமும் கேரளா சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி கேரளாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்