சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் அமித் ஷாவை விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்

சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றவாளி இல்லை எனக் கூறி மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று விடுவித்தது.

கடந்த 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் சொராபுதீனுக்குத் தொடர்பு உள்ளது என்றும், முக்கிய அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்தார் எனவும் குஜராத் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், பஸ்ஸில் சென்று கொண்டிருந்த சொராபுதீனையும், அவரது மனைவியையும் போலீஸார் கடத்தினர். பின்னர் சுட்டுக் கொன்றனர். இது போலி என்கவுன்ட்டர் என சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான துளசி பிரஜாபதி 2006-ம் ஆண்டு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட முயன்ற போது சுட்டுக் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரு கொலை வழக்குகளிலும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்தது என சிபிஐ குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து அமித் ஷா கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டு காரணமாக அப்போதைய முதல்வர் மோடியின் அமைச்சரவையிலிருந்து அமித் ஷா பதவி விலகினார்.

இவ்வழக்கு 2012-ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. அமித் ஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 18 பேர் மீது 2013-ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

.குற்றம்சாட்டப்பட்ட மேலும் இருவருடன் அமித் ஷா தொலைபேசியில் பேசிய தகவல்களை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது.

குற்றவாளி அல்ல

இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.பி. கோசாவி, ‘அமித் ஷா குற்றவாளி என்பதற்கான சிபிஐயின் அனுமானங்களை ஏற்க முடியாது’ எனக் கூறி வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவித்தார்.

மேல்முறையீடு

சொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் ஷேக், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். சிபிஐ விலைக்கு வாங்கப்பட்டு விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை முழுமையாகப் படித்த பின்பு, மேல்முறையீடு செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

போலி என்கவுன்ட்டர் வழக்கை கையாண்ட விதத்துக்காக சிபிஐக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டன் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் சமீபகாலம் வரை அமித் ஷாவை முக்கிய குற்றவாளி எனக் கூறி வந்த சிபிஐ பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் என தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டது என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் கூறும்போது, “சிபிஐ கண்டிப்பாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த தீர்ப்பானது, சிபிஐயை பாஜக தவறாகப் பயன்படுத்துவதையே வெளிப்படுத்துகிறது. சிபிஐ தரப்பில் கடைசி 2 நாட்களில் இளநிலை அளவிலான வழக்கறிஞர் 15 நிமிடங்களில் தனது வாதத்தை முடித்து விட்டார்” என்றார்.

கவலையளிக்கிறது: காங்.

சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வினோதமாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார் கூறும்போது “கரங்கள் கட்டப்பட்ட சிபிஐயின் மீது மத்திய அரசின் அழுத்தம் உள்ளது. சிபிஐ முற்றிலுமாக முடக்கப்பட்டு விட்டது. திடீரென சிபிஐ தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதை நீங்கள் பார்க்கலாம். அமித் ஷாவைச் சிறையிலடைப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருந்ததால்தான் அவர் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் எவ்வாறு, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டார்” என்றார்.

பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது, ‘சிபிஐ கூண்டுக் கிளியாக உள்ளது. அதன் கரங்கள் விலங்கிடப்பட்டுள்ளன. முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது” எனக் கூறிவந்ததை நினைவுகூர்ந்த அஜோய் குமார், சிபிஐ மீது அரசின் அழுத்தம் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். தீர்ப்பு விவரங்களை கட்சி முழுமையாகப் படிக்க வேண்டியுள்ளது” என்றார்.

ராஜ்நாத் கருத்து:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டர் தளத்தில் இதுதொடர்பாக, “இவ்வழக்கில் பாஜகவின் கருத்தையே நீதிமன்றத்தின் தீர்ப்பும் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. அமித் ஷா விடுவிக்கப்பட்டது அதீத மகிழ்ச்சியைத் தருகிறது” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE