ஜம்மு காஷ்மீரில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டியது அவசியம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஜம்மு காஷ்மீரில் தமது அரசியல் திட்டங்களை திணிக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது.

எனினும் ஜம்மு பிராந்தியத்தில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ள பாஜக, மாநிலத்தில் தமது அரசியல் திட்டங்களை திணிக்க முயற்சி செய்து வருகிறது.

அதற்கான எல்லா வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, கூட்டணி ஆட்சி அமைக்க எல்லா தரப்புடனும் பாஜக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒற்றுமை கருதியும் அதன் சிறப்பு அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்ளவும் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டியது அவசியம். எனவே, பாஜகவின் முயற்சியை தடுத்து நிறுத்த மதச்சார்பற்ற கட்சிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28, பாஜகவுக்கு 25, தேசிய மாநாட்டு கட்சிக்கு 15, காங்கிரஸுக்கு 12 இடங்கள் கிடைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 இடம் கிடைத்துள்ளது.

மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் அதில் பாஜகவுக்கு முக்கிய பங்கு இருக்கும் என, நேற்று முன்தினம் தமது கட்சி நிர் வாகிகள் மத்தியில் பேசும்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE